கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடக்கம்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடக்கம்
ADDED : அக் 10, 2025 12:32 PM

புதுடில்லி: கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்குகளில் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து, ஐகோர்ட் உத்தரவுப்படி ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தவெக, இதற்காக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை
சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிற மனுக்களுடன் சேர்த்து தவெக மனுவையும் இணைத்து இன்று விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தவெகவின் மனு மீது இன்று (அக் 10) விசாரணை நடத்தப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
தவெக வாதம்
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆஜராகி உள்ளனர். தவெக சார்பில் வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜர் ஆகி தனது வாதங்களை முன் வைத்தனர்.
அவர்கள், ''போலீசார் அறிவுறுத்தலின் படியே கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார். விஜய் இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கல் ஆகிவிடும் என போலீசார் தெரிவித்தனர். விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது'' என தெரிவித்தனர்.