மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைகிறது கேரளா
மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைகிறது கேரளா
ADDED : அக் 19, 2025 08:02 PM

திருவனந்தபுரம்: மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிதி பெறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதேநேரத்தில் மாநிலத்தின் கல்விக்கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட மாதிரி பள்ளித் திட்டம் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம். இதன் மூலம் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும். இதன் படி தற்போதுள்ள மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் 14,500 பள்ளிகளை தேர்வு செய்து, அதனை தரம் உயர்த்து திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இணையவில்லை. இதனால் அந்த மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், இத்தனை நாட்களாக இந்த திட்டத்தில் சேராத கேரளா, தற்போது சேர்வதற்கு முன்வந்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில பொதக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது: மத்திய அரசின் நிதி பெறுவதற்கு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் மத்திய அரசின் நிதி தேவைப்படுகிறது. இதில் இருந்து கேரளா தள்ளி நிற்பதற்கு எந்த காரணமும் இல்லை.
கேரளா குழந்தைகள் மற்றும் கல்வித் திட்டத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய தொகை ரூ.1,466 கோடி நிலுவையில் உள்ளது. மத்திய அரசின் நிதி பெறுவதற்காகவே இந்த திட்டத்தில் இணைகிறோம். அதேநேரத்தில் தற்போது மாநிலத்தில் அமலில் உள்ள கல்விக்கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. மத்திய அரசின் நிதி பெறுவதால், பல்வேறு திட்டங்களை பெற முடிவதுடன்,7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.
சுகாதாரம், உயர்கல்வி மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட பல துறைகள் ஏற்கனவே மத்திய அரசின் நிதியை பெற்று வருகின்றன. மத்திய அரசு கூறினாலும், மாநில அரசின் கல்விக்கொள்கைக்கு எதிராக செயல்பட மாட்டோம்.
அதேநேரத்தில் கேரள அரசில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில அரசின் திட்டம் குறித்து எங்களுக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலர் பினோய் விஸ்வம் கூறுகையில் இந்த விவகாரத்தில் முன்பு எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் இருந்து மாற்றம் ஏதும் இல்லை. மீடியாக்கள் மூலம் இது குறித்து தெரிந்து கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.