ADDED : மார் 09, 2026 08:08 AM

டெஹ்ரான்: போரில் கொல்லப்பட்ட ஈரானின் நீண்ட கால ஆட்சியாளர் அயதுல்லா கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி நாட்டின் அடுத்த ஆட்சியாளர் மற்றும் மத குருவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டார். இதனால் அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ''ஈரானின் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபாவை ஏற்றுக் கொள்ள முடியாது; என்னை கேட்டுத்தான் புதிய ஆட்சியாளரை தேர்வு செய்ய வேண்டும்'' என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
தற்போது டெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு தளங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், அயதுல்லா கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி நாட்டின் அடுத்த ஆட்சியாளராக ஈரான் நியமனம் செய்துள்ளது. மூத்த மதகுருமார்கள் மொஜ்தபாவை அவரது தந்தைக்குப் பிறகு ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுத்தனர் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
யார் இந்த மொஜ்தபா?
* 1969ம் ஆண்டு மஷாத் நகரில் மொஜ்தபா பிறந்தார். இவர் ஒருபோதும் பதவி வகித்ததில்லை, ஆட்சியில் எந்த முறையான பதவியும் வகிக்கவில்லை. இருப்பினும் அவர் பின்னால் இருந்து செல்வாக்கை செலுத்தி வந்திருக்கிறார்.
* ஈரான்-ஈராக் போரின் போது அவர் ஈரான் ஆயுதப் படையுடன் இணைந்து மொஜ்தபா போராடினார். மறைந்த ஆட்சியாளர் அயதுல்லா கமேனியின் மனைவி, மகள், பேரக்குழந்தை, மருமகள் மற்றும் மருமகன் கொல்லப்பட்ட நிலையில், உயிர் பிழைத்த கமேனி குடும்ப உறுப்பினர்களில் மொஜ்தபாவும் ஒருவர்.
* 2019ம் ஆண்டில் அமெரிக்க கருவூலத் துறை மொஜ்தபா மீது தடைகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

