பஞ்சாபில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு!: கவர்னர் ஆட்சியை அமல்படுத்த பா.ஜ., வலியுறுத்தல்
பஞ்சாபில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு!: கவர்னர் ஆட்சியை அமல்படுத்த பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : நவ 23, 2025 12:01 AM

புதுடில்லி: 'பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. தினந்தோறும் கொலை, கொள்ளை, ரவுடிகளின் அட்டூழியம், போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்களால், மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்' என பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளதுடன், மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே ரவுடிகளின் ராஜ்ஜியம் வேரூன்றி விட்டது. பஞ்சாபை சேர்ந்த பல சர்வதேச தாதாக்கள், கனடா, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து செயல்படுகின்றனர்.
அங்கிருந்தபடி உள்ளூரில் பல குற்ற செயல்களை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். இதை, மாநில போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தொடர் கொலைகள்
இதனால் பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. அதற்கு அரசின் செயலற்ற தன்மையே காரணம் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
கடந்த, 16ம் தேதி பெரோஸ்பூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்தகொலை சம்பவம் பஞ்சாப் மக்களை உலுக்கியது.
ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் பல்தேவ் ராஜ் அரோராவின் மகன் நவீன் அரோரா, 48, என்பவர் அவரது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இரு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நான்கு குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொலை பஞ்சாபின் மத நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டது என்று ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர் குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் நடந்து இரு தினங்களே ஆன நிலையில், 18ம் தேதி அமிர்தசரஸ் பஸ் நிலையத்தில் தனியார் போக்குவரத்து நிறுவன மேலாளரை ஒரு கும்பல் சுட்டுக்கொன்றது. இந்த வகை கொலை சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பயமின்றி தொடர்கின்றன.
கடும் விமர்சனம்
கூலிப்படையினரின் அட்டூழியத்தால் அரசு மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து அமிர்தசரஸ் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யை முதல்வர் சஸ்பெண்ட் செய்தார்.
இருப்பினும் இந்த கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பகவந்த் மான் பதவி விலக வேண்டும் என பா.ஜ., - காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சி கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பா.ஜ., ஒருபடி மேலே சென்று, மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்தும் படி மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.
இ து குறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் வெளியிட்ட அறிக்கை:
கூலிப்படையினர், பொதுமக்களையும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மகனையும் கொன்றுள்ளனர். இது, பஞ்சாபின் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் செயல். இது வெறும் குற்றச் சம்பவம் அல்ல; பஞ்சாபிகள் மீதான நேரடித் தாக்குதல்.
ஆம் ஆத்மி அரசு சட்டம் ஒழுங்கை கையாள்வதில் முழு தோல்வி அடைந்து விட்டது. உடனடியாக மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட அறிக்கையிலும், ஆம் ஆத்மி அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக அக்கட்சியினர் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

