UPDATED : மே 11, 2026 03:26 PM
ADDED : மே 11, 2026 01:02 AM

- எல். ஆதிமூலம் -
வெளியீட்டாளர்,தினமலர்
த.வெ.க., தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்றதும் போட்ட மூன்று கையெழுத்துகளை விட, உங்கள் பேச்சு பிடித்தது; குறிப்பாக, வெளிப்படையான நிர்வாகம் என்கிற உங்கள் வாக்குறுதி! நிறைய பேருக்கு இதை 'ஓப்பனாக' அறிவிக்கும் துணிச்சல் கிடையாது. அறிவித்தவர்களுக்கு, சுயநல சக்திகளை மீறி அதை செயல்படுத்தும் தைரியம் கிடையாது.
வெளிப்படை நிர்வாகம் தொடங்க வேண்டிய இடம், சட்டசபை. சபையில் என்ன நடக்கிறது என்பதை அப்படியே தமிழக மக்கள் பார்க்கட்டும், கேட்கட்டும்; ஒரு நிமிடம் கூட, 'லைவ் டெலிகாஸ்ட்' தடைபடக் கூடாது.
'சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு' என்று எகிறி குதித்த ஆணவ அ.தி.மு.க., சபாநாயகர் தொடங்கி, எதிர்க்கட்சிகள் என்ன பேசினாலும் அதை சபை குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட தி.மு.க., அடிமை சபாநாயகர் வரை எல்லாரையும் தமிழகம் பார்த்தாயிற்று.
சபையில் உட்கார்ந்திருக்கும் அத்தனை பேரும், லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதிகள். அவர்கள் சொல்லும் கருத்து, ஆளும் கட்சிக்கோ, முதல்வருக்கோ கசப்பாக இருக்கலாம். அதற்காக அந்த கருத்தை சபை குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடும் அதிகாரத்தை கையில் எடுத்த சபாநாயகரை என்னவென்று சொல்வது!
புண்ணிய பூமி
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!' என்று இறைவனுக்கே சவால் விட்ட புண்ணிய பூமி தமிழகம். கேவலம், ஐந்தாண்டுக்கு நாட்டை ஆள மக்களால் குத்தகை தரப்பட்ட ஒரு அரசின் தவறை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியின் கருத்தை, மண்ணில் புதைக்க எவர் கொடுத்தது அதிகாரம்?
மக்களா முட்டாள்கள்? அறிவு இல்லாமலா ஆட்சி செய்தவர்களை துாக்கி எறிந்து விட்டு, கட்சி ஆரம்பித்து, 828 நாட்களே ஆன கட்சிக்கு ஆதரவு அளித்தனர்?
புதிய அரசை நீங்கள் விளாசுங்கள்; அதன் தவறுகளை மிகைப்படுத்தி குற்றஞ்சாட்டுங்கள்; 'மீம்ஸ்' போடுங்கள்; 'கார்ட்டூன்' வரையுங்கள்; கேலி செய்யுங்கள். அத்தனைக்கும், மக்களுக்கு உரிமை இருக்கிறது; மக்களின் பிரதிநிதிகளுக்கும் இருக்கிறது. இது ஜனநாயகத்தின் வெளிப்பாடு.
உலகின் அதிகாரம் மிக்க நபரான அமெரிக்க அதிபர் டிரம்ப், நிர்வாணமாக, 'வாக்கிங்' போவதாக, கார்ட்டூன்களில் பிரசுரிக்கின்றன அந்நாட்டு பத்திரிகைகள். அவரால் திட்ட முடியுமே தவிர, பத்திரிகை ஆசிரியரை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது.
இங்கு நடப்பது போல, 'குண்டர் சட்டத்தில்' உள்ளே தள்ள முடியாது. ஏன் என்றால், சராசரி குடிமகனை விட நாட்டின் அதிபருக்கு, 'எக்ஸ்ட்ரா' அதிகாரம் கிடையாது என்கிறது, அமெரிக்க அரசியல் சாசனம்.
இங்கே, 'இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்' என்பது தான், முந்தைய ஆட்சியாளர்களின் கைத்தடி விதியாக இருந்தது.
அரசின், அமைச்சர்களின், பதவியற்ற பவர் சென்டர்களின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதை குற்றமாகக் கருதி, விமர்சகனின் வீட்டுக்குள் ஒரு முதிய தாய் மட்டுமே இருக்கிறார் என்பதை பொருட்படுத்தாமல், மலத்தையும் சாக்கடையையும் ஊற்றச் சொன்ன கொடூரமான அரசை, இந்த மண் சகித்துக்கொள்ள நேர்ந்தது.
அத்தனை பேரையும் விடுதலை செய்ய உடனே உத்தரவிடுங்கள், முதல்வரே. பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்குங்கள்.
சுயநல அதிகாரிகள்
அரசாங்கத்தை, அமைச்சர்களை, ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் அத்துமீறல்களை ஆதாரபூர்வமாக வெளியிடும் விமர்சகர்களுக்கு, அரசாங்க விருதே அறிவிக்கலாம்; அது உங்களுக்கு தான் லாபம்; இந்த மாநிலத்துக்கு தான் லாபம்! 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' என்று துவங்கும் குறளுக்கு அர்த்தம் பாருங்கள்!
இதை செய்ய துணிந்தால், மனசாட்சி உள்ள ஏனைய மாநிலங்களும், உங்களை பின்பற்றும்! 'டிரான்ஸ்பரன்சி' என்ற தாரக மந்திரம் அற்புதமானது; சட்ட சபையில் இருந்து அதை தொடங்குங்கள்.
எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் பதிவாகட்டும்; அரசு தரப்பில் தரப்படும் பதில்களும் பதிவாகட்டும். எது சரி என்பதை மக்களே தீர்மானிக் கட்டும்!
மக்களுக்காக மட்டுமல்ல, எதிர்கால சந்ததிகளுக்காகவும் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் முதல்வர் விஜய்!
தன் தோலை பாதுகாக்க துடிக்கும் சுயநல அதிகாரிகள் பேச்சை கேட்டு, இந்த சீர்திருத்தத்தை நீங்கள் செய்ய தவறினால் அல்லது தயங்கினால், தமிழக மக்கள் ஏமாந்து போவர்.
முதல்வராக உங்கள் முதல் உரையை கேட்ட பின், நீங்கள் உண்மையிலேயே மாற்றத்தின் பிரதிநிதியாக விசுவரூபம் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை வலுவடைந்துள்ளது. ஏமாற்றுவீர்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் தெரியவில்லை.
விஷ் யு குட் லக்! தமிழ்நாடு காத்திருக்கிறது!
