நுாலக புத்தக முறைகேடு: நீதிபதிகள் கேட்ட 9 கேள்விகள்
நுாலக புத்தக முறைகேடு: நீதிபதிகள் கேட்ட 9 கேள்விகள்
ADDED : நவ 18, 2026 05:26 AM

கோவை: நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழக அரசிடம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதுபோன்ற பிரச்னை ஏற்கனவே, 2019ல் மதுரை ஐகோர்ட்டில் விவாதிக்கப்பட்டு, அரசுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டன.
அதை சரியாகக் கடைபிடித்திருந்தால், இத்தகைய முறைகேட்டை தவிர்க்கலாம். அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசிடம், ஒன்பது கேள்விகளுக்கு பதில் கேட்டுள்ளது.
அதன் விபரம்:
1. கோவையில் ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்துக்கு சிறப்பு பிரிவின் கீழ் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பொதுப்பிரிவில் கொள்முதல் செய்ய பின்பற்றப்படும் கொள்கைகள், நிபந்தனைகளே சிறப்பு பிரிவிலும் பின்பற்றப்படுகின்றனவா?
2. மதுரை, கோவையில் உள்ள நுாலகங்களுக்கு புத்தகங்களை தேர்வு செய்து கொள்முதல் செய்ய எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன?
3. மதுரை நுாலகத்துக்கு 2025 ஜன., முதல் டிச., வரை எத்தனை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன; கோவை நுாலகத்துக்கு எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டன?
4. நிபுணர் குழுவால் நிராகரிக்கப்பட்ட புத்தகங்களில் எத்தனை, கோவை ஈ.வெ.ரா., பெயரில் உள்ள நுாலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டன?
5. 137 உறுப்பினர்களை கொண்ட நிபுணர் குழு எத்தனை புத்தகங்களை கொள்முதல் செய்ய பரிந்துரைத்தது? எவ்வளவு கால அவகாசம் வழங்கப்பட்டது? எத்தனை கொள்முதல் செய்யப்பட்டன?
6. கடந்த விசாரணையின் போது, 'அகல்விளக்கு' பதிப்பகம் 2,300க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை சமர்ப்பித்ததாகவும், 1,700 தேர்வு செய்யப்பட்டு, கொள்முதல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 600 புத்தகங்களை நிராகரித்தது யார்? அதற்கான காரணம் என்ன? ஒரு பதிப்பகத்தின் 600 புத்தக தலைப்புகளை நிராகரிக்க முடிந்தபோது, மீதமுள்ள 1,700 புத்தகங்களை கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு என்ன அடிப்படை இருந்தது?
7. ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்துக்கு எத்தனை ஆங்கில புத்தகங்கள் வாங்கப்பட்டன? பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்டதா, புத்தக விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்டதா? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? முழு நிதியும் பயன்படுத்தப்பட்டு விட்டதா?
8. கொள்முதல் பணிகள், பொது நுாலகத்துறை இயக்குநர், பள்ளி கல்வித்துறை செயலர் மேற்பார்வையில் நடந்தனவா? அவர்கள் கோப்புகளை ஆய்வு செய்தனரா? செயலர் ஏதேனும் எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல் வழங்கினாரா?
9. நிபுணர் குழு பரிந்துரைத்தும் கொள்முதல் செய்யாத புத்தகங்கள் எத்தனை? கொள்முதல் செய்யாததற்கான காரணம் என்ன?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
