கோவா விடுதி தீவிபத்து: இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட உரிமையாளர்கள்
கோவா விடுதி தீவிபத்து: இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட உரிமையாளர்கள்
UPDATED : டிச 16, 2025 10:10 PM
ADDED : டிச 16, 2025 03:42 PM

புதுடில்லி: கோவா இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலியான நிலையில், தாய்லாந்தில் கைதான அதன் உரிமையாளர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
கோவா மாநிலம், பனாஜி நகர் அருகே உள்ளது அர்புரா கிராமம். இந்த பகுதியில் உள்ள கடற்கரை, பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கிருந்த பிரபல கேளிக்கை விடுதியில் சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், 25 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையறிந்த விடுதியின் உரிமையாளர்களான கவுரவ் லூத்ரா(44) மற்றும் சவுரப் லூத்ரா(40) இருவரும் டில்லியில் இருந்து தெற்காசிய நாடான தாய்லாந்துக்கு தப்பிச் சென்றனர்.
அவர்களை கைது செய்ய இண்டர்போல் அமைப்பு மூலம் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. கடந்த 11ம் தேதி புக்கெட் நகரில் மதிய உணவுக்காக சென்ற போது அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணியில் கோவா போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து, கவுரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா ஆகியோர் இண்டிகோ விமானம் மூலம் புக்கெட் நகரில் இருந்து டில்லி அழைத்து வரப்பட்டனர்.
இருவரும் நாளை( டிச.,17) காலை 11 மணிக்கு கோவா அழைத்துச் செல்லப்படுவார்கள் என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

