நாளை விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3- எம்5 ராக்கெட்; இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு
நாளை விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3- எம்5 ராக்கெட்; இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு
ADDED : நவ 01, 2025 08:57 AM

புதுடில்லி: விண்ணில் நாளை (நவ., 02) பாய உள்ள எல்விஎம் 3- எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
சந்திரயான் 3 அனுப்பிய எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் விண்ணிற்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை நாளை நவம்பர் 2ம் தேதி இஸ்ரோ அனுப்புகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட, இந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்த திட்டத்திற்கான கவுண்ட்டவுன் இன்று (நவ.,01) மாலை தொடங்குகிறது. இந்த திட்டம் வெற்றி அடைய, திருப்பதி கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: நாளை எல்விஎம் 3- எம்5 ராக்கெட் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை ஏவ இலக்கு வைத்துள்ளோம். சிஎம்எஸ்-03 ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இது மிக முக்கியமான செயற்கைக்கோளாக இருக்கும்.
தகவல்களை சேகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது, ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. செயற்கைக்கோள் ஏவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. நாளை மாலை 5:26 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.
எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மற்றும் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:
ராக்கெட் பெயர்- எல்விஎம்3- எம்5
செயற்கைக்கோள்: சிஎம்எஸ்-03, மல்டி பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.
எடை: செயற்கைக்கோள், எரிபொருள் உட்பட மொத்தம், 642 டன்.
பிஎஸ்எல்வி- ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்களை விட, அதிக எடையை சுமந்தும் செல்லும் திறன் உடையது.
விண்ணில் நிலைநிறுத்தம்
பூமியில் இருந்து புறப்பட்ட, 16 வது நிமிடத்தில் செயற்கைக்கோளை 179 கி.மீ., உயரம் உள்ள புவி ஒத்திசைவு சுற்று பாதையில் ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

