சிறுவர்களை சிறைபிடித்த விவகாரம்: மஹாராஷ்டிரா அரசு விளக்கம்
சிறுவர்களை சிறைபிடித்த விவகாரம்: மஹாராஷ்டிரா அரசு விளக்கம்
ADDED : நவ 01, 2025 12:01 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பவோய் பகுதியில் செயல்படும் ஆர்.ஏ., ஸ்டூடியோவில் பணியாற்றிய ரோஹித் ஆர்யா என்பவர், 'வெப்' தொடருக்காக நடிகர்களை தேர்வு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் நடந்த தேர்வின்போது, 17 சிறுவர்கள் உட்பட 19 பேரை, பிணைக்கைதிகளாக அவர் பிடித்து வைத்தார். அவருடன் நடந்த பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து, ஸ்டூடியோவுக்குள் நுழைந்த போலீசார், 19 பேரை பத்திரமாக மீட்டதுடன், அவரை சுட்டுக் கொன்றனர்.
கடந்த 2022 - 2024 வரை, மஹாஷ்டிரா கல்வி அமைச்சராக சிவசேனா கட்சியின் தீபக் கேசர்க்கர் இருந்தார்.
இந்த காலத்தில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2 கோடி ரூபாயில் செலவில், ரோஹித் ஆர்யாவின் நிறுவனம் பணிகளை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு அரசு பணம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே அரசை எச்சரிக்கும் வகையில் 19 பேரை அவர் சிறைபிடித்ததாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வி செயலர் ரஞ்சித் தியோல் நேற்று கூறுகையில், “துாய்மை இந்தியா பணியை செய்வதற்காக ரோஹித் ஆர்யாவுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவருக்கு எந்த பணமும் செலுத்த வேண்டியதில்லை.
''அனுமதியின்றி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததால், அவரது பணி நிறுத்தி வைக்கப்பட்டது. சிறுவர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை,” என்றார்.

