அமைதியை நோக்கி மணிப்பூர்: மத்திய அரசுடன் குக்கி அமைப்பினர் ஒப்பந்தம்
அமைதியை நோக்கி மணிப்பூர்: மத்திய அரசுடன் குக்கி அமைப்பினர் ஒப்பந்தம்
UPDATED : செப் 04, 2025 08:55 PM
ADDED : செப் 04, 2025 08:52 PM

புதுடில்லி : மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலை எண் -2 ஐ திறக்க குக்கி- ஸோ பழங்குடியின கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு மே முதல் குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. இதில் 260 பேர் உயிரிழந்துள்ளனர்.60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே வரும் 13ம் தேதி பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் டில்லியில் மத்திய அரசு, மணிப்பூர் அரசு மற்றும் குக்கி - ஸோ கவுன்சில் அமைப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை -2 ஐ திறந்துவிட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் - நாகாலாந்து இடையிலான மிக முக்கிய இணைப்பாக உள்ள இச்சாலை கடந்த 2023ம் ஆண்டு முதல் மூடப்பட்டு உள்ளது.
மேலும், பிரச்னை உள்ள பகுதிகளில் இருந்து தங்களது முகாம்களை குறைக்கவும், சிலவற்றை வேறு இடத்துக்கு மாற்றவும் கூக்கி அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள், ஆயுதங்களை அருகில் உள்ள சிஆர்பிஎப் மற்றும் பிஎஸ்எப் முகாம்களில் வழங்கவும், வெளிநாட்டினர் யாரும் ஊடுருவி உள்ளனரா என்பதை ஆராய பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க கூட்டுக்குழு அமைக்கப்படும். பிரச்னைகள் இருப்பின் உடனடியாக சரி செய்யப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.