பாய், கட்டில், தலையணை, சலவை, கழிப்பறை... சிறையில் சோக்சிக்கு அடிக்கப்போகுது 'லக்!'
பாய், கட்டில், தலையணை, சலவை, கழிப்பறை... சிறையில் சோக்சிக்கு அடிக்கப்போகுது 'லக்!'
ADDED : செப் 09, 2025 12:42 AM

மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி மெஹுல் சோக்சி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், சிறையில் அவருக்கு என்ன மாதிரியான வசதிகள் செய்து தரப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,500 கோடி ரூபாய் கடன் பெற்ற வைர வியாபாரி மெஹுல் சோக்சி, வெளிநாடு தப்பிச் சென்றார்.
கடிதம்
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் பதுங்கி இருந்த அவரை, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அரசு கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தது. அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சோக்சி அடைக்கப்படவுள்ள சிறையில் அவருக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து பெல்ஜியம் அரசுக்கும், அந்நாட்டின் நீதித்துறைக்கும் கடிதம் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் சில வாக்குறுதிகளை அளித்துள்ளது.
அதன் விபரம்:
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில், அறை எண் - 12 சோக்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கி கடன் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், தண்டனை காலம் முடியும் வரை, அறை எண் 12லேயே அவர் அடைக்கப்படுவார்.
இதற்காக அந்த அறையில், 3 சதுர மீட்டர் அளவுக்கு தனிப்பட்ட இடவசதி செய்யப்பட்டுள்ளது. அறையில் அவருக்கு மென்மையான பருத்தி பாய், தலையணை, போர்வை வழங்கப்படும். மருத்துவ காரணங்களுக்காக மர கட்டிலோ அல்லது உலோக கட்டிலோ வழங்கப்படும்.
போதிய காற்றோட்டத்துடன், வெளிச்சம் இருக்கும் வகையில் அந்த அறையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட தனிப்பட்ட பொருட்களை வைத்துக் கொள்வதற்கான வசதியும் அந்த அறையில் இருக்கிறது.
அனுமதி
ஒவ்வொரு நாளும் மெஹுல் சோக்சிக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும். 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் போதிய மருத்துவ வசதிகள் தரப்படும். துணிகளை சலவை செய்வதற்கும், இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படும். வெளிப்புறத்தில் தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்கப்படும்.
பேட்மின்டன், கேரம் உள்ளிட்டவை விளையாடவும் அனுமதி தரப்படும். அங்கு நடத்தப்படும் யோகா, தியான பயிற்சி வகுப்புகளையும் மெஹூல் பயன்படுத்தலாம். நுாலகத்தையும் கைதிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறைக்குள், 20 படுக்கை வசதியுடன் ஐ.சி.யு., சிகிச்சைக்கான பிரிவும் இயங்குகிறது. மருத்துவ அவசரம் எனில், 3 கி.மீ., தொலைவில் உள்ள ஜே.ஜே.குரூப் ஆப் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம். தேவைப்பட்டால், தன் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தும் அவர் சிகிச்சை பெறலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.