விண்வெளியில் லட்சக்கணக்கான மக்கள் வசிப்பார்கள்: ஜெப் பெஜோஸ் கணிப்பு
விண்வெளியில் லட்சக்கணக்கான மக்கள் வசிப்பார்கள்: ஜெப் பெஜோஸ் கணிப்பு
ADDED : அக் 22, 2025 10:27 PM

வாஷிங்டன்: 2045ம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோஸ் கூறியுள்ளார்.
உலகின் 3வது கோடீஸ்வரர், அமேசான் நிறுவனர், பிரபல தொழிலதிபர் என்ற பெருமைக்குரியவர் ஜெப் பெஜோஸ்.
இந்நிலையில் இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் அவர் பேசியதாவது: அடுத்த ஓரிரு தசாப்தங்களில் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள். இது வேகமாக நடக்கப்போகிறது. இது தேவை காரணமாக நடக்காது. மக்களாகவே விரும்பி விண்வெளியில் வசிப்பார்கள்.
நிலவின் தரைபரப்பு அல்லது வேறு எங்கும் பணியாற்றுவதற்கு ரோபோக்களை அனுப்பி வைக்க முடியும். அது மனிதர்களை அனுப்புவதைக் காட்டிலும் செலவு குறைந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்
மேலும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் எனக்கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெப் பெஜோஸ் கூறியதாவது: நமது கண்டுபிடிப்புகளில் இருந்தே நாகரிக வளர்ச்சிவருகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு முன்பு யாரோ ஒருவர் கலப்பையை கண்டுபிடித்தார்.
நாம் அனைவரும் பணக்காரர்கள் ஆனோம். நான் அனைத்து நாகரிகங்களை பற்றி பேசுகிறேன். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை நமது வளர்ச்சியை ஆதரிக்கின்றன. அந்த முறை தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.