மே. வங்கத்தில் காட்டு ராஜ்ஜிய ஆட்சியை ஒழிக்க பாஜவுக்கு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் மோடி
மே. வங்கத்தில் காட்டு ராஜ்ஜிய ஆட்சியை ஒழிக்க பாஜவுக்கு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் மோடி
ADDED : டிச 20, 2025 04:11 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜிய ஆட்சியை ஒழிக்க பாஜவுக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
மேற்கு வங்கம் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
அதன் பின்னர் மீண்டும் கோல்கட்டாவுக்கே பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் திருப்பி விடப்பட்டது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டு திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.
இதையடுத்து, மாநாட்டு திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற பாஜ தொண்டர்களில் சிலர் ரயில் விபத்தில் உயிரிழந்ததை அறிந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
நம் நாடு இன்று விரைவான வளர்ச்சியை விரும்புகிறது. பீஹார் மீண்டும் வளர்ச்சியை நோக்கி செல்ல தேஜ கூட்டணி அரசாங்கத்திற்கு ஒரு மாபெரும் வாய்ப்பை மக்கள் வழங்கி உள்ளனர். பீஹார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பாஜ வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன.
பீஹார் மக்கள் காட்டு ராஜ்ஜிய ஆட்சியை நிராகரித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பிறகும், அவர்கள் பாஜ- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தலில் முன்பு இருந்ததை விட அதிக இடங்களை அளித்து உள்ளனர். இப்போது நாம் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்ஐஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.
அந்த கட்சி என்னையும், பாஜவையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது. பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம்.
இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பாஜவுக்கு வாய்ப்பு அளியுங்கள். மேற்கு வங்கமும், வங்க மொழியும் இந்தியாவின் வரலாற்றையும் கலாசாரத்தையும் வளப்படுத்தி இருக்கின்றன.
'வந்தே மாதரம்' என்பது அத்தகைய ஒரு படைப்பு. முழு நாடும் 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. பார்லிமென்டிலும் விவாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் இங்கு முடங்கியுள்ளன. வளர்ச்சியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பாஜவுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
திரிணமுல் காங்கிரசின் சதித்திட்டங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்கள் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்துகிறார்கள். சிலர் 'கோ பேக் மோடி' என்ற பலகைகளை வைத்திருப்பதை நான் சமூக ஊடகங்களில் பார்த்தேன். மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் கம்பத்திலும் 'கோ பேக் இன்பில்ட்ரேட்டர்ஸ்' என்று எழுதப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
எஸ்ஐஆர் பணிகளுக்கு பின்னர் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி முதல்முறையாக பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

