ஓராண்டாக பல்வேறு துறைகளில் மோடி அரசு சீர்திருத்தம்!: நெருக்கடிகளை சமாளிக்க அடுத்தடுத்து சரவெடி
ஓராண்டாக பல்வேறு துறைகளில் மோடி அரசு சீர்திருத்தம்!: நெருக்கடிகளை சமாளிக்க அடுத்தடுத்து சரவெடி
ADDED : டிச 28, 2025 01:44 AM

நாட்டின் பல்வேறு துறைகளில் மிக முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி ஓராண்டாக மேற்கொண்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நெருக்கடி கொடுத்த சூழலில், அதற்கு பணியாமல் ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பையே அவர் மாற்றி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, மூன்றாவது முறையாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்து விட்டது.
தே.ஜ., கூட்டணியின் 3.0 ஆட்சிக்கு ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் முக்கிய துாணாக இருக்கின்றனர்.
இதனாலேயே மத்திய அமைச்சரவையில் அந்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார்.
புதிய வரி திட்டம் தனிப் பெரும்பான்மை இல்லாத போதும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் பல்வேறு துறைகளில் அதிரடியாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
கடந்த பிப்., 1ல், பார்லி.,யில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர மக்கள் அதிலும் மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் புதிய வரி திட்டத்தை அறிவித்தார்.
அதன்படி, 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு அளிக்கப் பட்டது.
நம் நாட்டின் மக்கள் தொகையில், கணிசமான இடம் நடுத்தர மக்களுக்கே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் எண்ணிக்கை, 6.3 சதவீதமாக உயர்ந்து வருகிறது.
அதாவது மொத்த மக்கள் தொ கையில் அவர்களது பிரதிநிதித்துவம், 31 சதவீதம். 2031ல் இது, 38 சதவீதமாகவும், 2047ல், 60 சதவீதமாகவும் உயரப் போகிறது. எனவே, நடுத்தர மக்களின் நுகர்வு திறனை அதிகரிக்கும் வகையில் இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், இந்த ஆண்டு தீபாவளி பரிசாக, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., விகிதங்கள் 5, 18 சதவீதமாக சுருக்கப்பட்டன. குறிப்பிட்ட சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்நடவடிக்கையும் மக்களின் நுகர்வு திறனை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது.
மத்திய அரசு எடுத்த சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது, விரிவான தொழிலாளர் விதிகளை அமல்படுத்தியது தான். ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் போது அமலான 29 சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு தொழிலாளர் விதிகளாக மாற்றி அமைக்கப்பட்டது.
நாட்டின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில், காப்பீட்டு துறையிலும் மிக முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன், 74 சதவீதமாக இருந்த நேரடி அன்னிய முதலீடு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தடையற்ற வர்த்தகம் இதுவரை அரசு வசமிருந்த அணுசக்தி துறையிலும், 100 சதவீத அளவுக்கு தனியாரை அனுமதிக்கும் வகையில், 'ஷாந்தி' மசோதாவும் பார்லி.,யின் கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் மின் துறையில் நம் நாடு தன்னிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழிற்சாலைகளின் கார்பன் உமிழ்வு அடர்த்தியும் கணிசமாக குறையும் என கூறப் படுகிறது.
நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் பங்குச் சந்தைகளில் நடக்கும் மோசடிகளை தடுத்து, வெளிப்படையான வர்த்தகத்திற்காக பங்குச்சந்தை விதிகள் மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டது.
சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் அமெரிக்கா, சீனாவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பிரிட்டன், ஓமன் மற்றும் நியூசிலாந்து நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆப் ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளையும் கடந்து இந்த வர்த்தகம் விரிவடையப் போகிறது. அதற்கான பேச்சுகளும் துவங்கியுள்ளன. இதன் மூலம், நம் நாட்டின் வர்த்தகம் வரும் ஆண்டுகளில் கணிசமாக வளர்வதுடன், பொருளாதாரமும் ஏறுமுகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடருக்கு இடையே தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, 'முழு அளவிலான சீர்திருத்த நடைமுறைக்குள் நம் நாடு நுழைய போவதாகவும், அதற்காக அனைவரும் தயாராக வேண்டும்' எனவும் கூறியிருந்தார்.
அந்த வகையில், கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் சிறு துளி தான். அடுத்து வரப்போகும் ஆண்டுகளில் தான் மிகப் பெரிய மாற்றங்கள் காத்திருக்கின்றன.
-- நமது சிறப்பு நிருபர் -:

