விக்ரம் வெளியிட்ட குரங்கு வீடியோ; ஈரோடு பண்ணை உரிமையாளர் மீது 2 பிரிவில் வனத்துறை வழக்கு
விக்ரம் வெளியிட்ட குரங்கு வீடியோ; ஈரோடு பண்ணை உரிமையாளர் மீது 2 பிரிவில் வனத்துறை வழக்கு
ADDED : ஆக 14, 2026 06:55 PM

சென்னை: உரிய ஆவணங்கள் இல்லாமல், வெளிநாட்டுக் குரங்கு வைத்திருக்கும் ஈரோடு பண்ணை உரிமையாளர் கேசவநாதன் மீது 2 பிரிவுகளில் வனத்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில், தொழிலதிபர் ரங்கநாதன் வீட்டில், 'லார் கிப்பன்' குரங்கு இருந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும், அரிய வகை உயிரினமான இந்த குரங்குடன், நடிகர் விக்ரம் சமீபத்தில் 'வீடியோ' வெளியிட்டார். வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ள இவ்வகை குரங்கை, இவர் எப்படி வளர்த்து வருகிறார் என, பலரும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வனத்துறையினர் ரங்கநாதன் வீட்டிற்கு சென்றனர். அங்கு 'லார் கிப்பன்' குரங்கு இல்லை. அதை தங்களுக்கு வழங்கிய, ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த கேசவநாதனிடம், திருப்பி கொடுத்து விட்டதாக, ரங்கநாதன் தரப்பினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர், பெருந்துறையில் உள்ள, கேசவநாதன் பண்ணை வீட்டில் ஆய்வு செய்தனர். அங்கு அந்த குரங்கு மட்டுமல்லாது, வேறு சில அரிய வகை விலங்குகளும் இருப்பது தெரியவந்தது. 'லார் கிப்பன்' குரங்கை வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனினும், குரங்கை வனத்துறையினர் பறிமுதல் செய்யவில்லை.வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஈரோடு பெருந்துறையில், கேசவநாதன் என்பவரிடம், 'லார் கிப்பன்' உட்பட பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் இருப்பது தெரியவந்தது. இவற்றுக்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு, அவருக்கு 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டது. வனத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, சில ஆவணங்களை தாக்கல் செய்தார்; அவை போதுமானதாக இல்லை.
எந்தெந்த விலங்குகளுக்கு ஆவணங்கள் இல்லை என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். கேசவநாதனிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்துள்ள, 'லார் கிப்பன்' வகை குரங்கை பறிமுதல் செய்ய, தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைக்காததால், குரங்கை பறிமுதல் செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
கடைசியில், கேசவநாதன் மீது விதிமீறல்களுக்காக 2 பிரிவுகளில் வனத்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். 'இந்த விவகாரத்தில், தங்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை' என்று கூறி, நடிகர் விக்ரம், அவரது சம்பந்தி ரங்கநாதன் ஆகியோர், வனத்துறையினருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
