தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மை டியர் விஜய் அங்கிள்...

மை டியர் விஜய் அங்கிள்...

மை டியர் விஜய் அங்கிள்...


UPDATED : ஜூலை 13, 2026 12:09 AM

ADDED : ஜூலை 13, 2026 12:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2026 12:09 AM ADDED : ஜூலை 13, 2026 12:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்கள் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்ட ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் மடல்.

கரூரில் நடந்த கூட்டத்தில் நீங்க பேசினதை டிவியில பார்த்தேன். 'லஞ்சம் கேட்டா கொடுக்காதீங்க, நான் இருக்கேன்' அப்படின்னு நீங்க கெத்தா சொன்ன வார்த்தைகள், எங்கள மாதிரி ஸ்கூல் படிக்கிற பசங்களுக்கும், நெஜமாவே பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு. காலையில 'தினமலர்' பாத்தப்ப, உங்க வார்த்தைகளுக்கு என்ன வெயிட் இருக்குனு முழுசா புரிஞ்சுது. அதனால தான் 'தினமலர்' வழியாவே லெட்டரை அனுப்புறேன். (இது டாடி கொடுத்த அய்டியா தான்; உங்க அட்ரசுக்கு அனுப்பினா அதிகாரிகள் பிரிச்சு படிச்சுட்டு டஸ்ட்பின்ல போட்டாலும் போடுவாங்க..னு சொன்னார்)

தப்பு செய்றவங்க யாரா இருந்தாலும் விடமாட்டேன்னு நீங்க கொடுத்த தைரியத்துக்கு, ஒரு பெரிய தேங்க்ஸ் அங்கிள்!

நீங்க சி.எம்.,ஆ வந்தவுடனே பழைய தப்புங்களை எல்லாம் சரி செய்ய ரொம்ப ஆசைப்படுறீங்க. குறிப்பா, நீங்க லஞ்ச ஊழலுக்கு எதிரா பேசுற எல்லாத்தையும் நாங்க பாலோ பண்றோம். ஆனா, லஞ்சத்த ஒழிக்க முடியும்னு என்னோட பேரன்சுக்கே நம்பிக்கை வரல, அங்கிள். பட், நான் நம்புறேன், அங்கிள். உங்களால முடியும். ஆனா, லஞ்சத்தை நிஜமாவே ஒழிக்கணும்னா, வெறும் அதிகாரிகளை மாத்துனா பத்தாது அங்கிள், மொத்த சிஸ்டத்தையுமே மாத்தணும்.

எந்த துறைகள்ல லஞ்சம் ஓவரா இருக்குதுனு ரிசர்ச் செஞ்சு பாத்தா ஒரு விஷயம் தெரியுது, அங்கிள். அரசாங்கம் கடை நடத்தி பிசினஸ் பண்ற துறைகள்ல தான் ஊழல் அதிகமா இருக்கு. அப்படி,3 துறைகள நான் டிக் அடிச்சுவச்சிருக்கேன்.

டாஸ்மாக்



அரசாங்கமே சாராயம் விக்கணுமா? அப்டீனு ஸ்கூல் ஆனுவல் டே பேச்சு போட்டில என் ப்ரண்ட் கேட்டா. அதுக்கு செம கிளாப்ஸ், அங்கிள். அவ அப்ப கேட்டத நா இப்ப உங்க கிட்ட கேக்குறேன். அரசாங்கம் சாராயம் வித்தே ஆகணுமா?

கவர்மென்டே நேரடியா மது விக்கிறதால ஏகப்பட்ட லஞ்சமும் சண்டை சச்சரவும் தான் வருது. மது விக்கிற பிசினஸ் நம்ம கவர்ன்மென்டுக்கு வேண்டாம் அங்கிள். முன்னாடி ஆட்சி செஞ்சவங்க மது ஆலை நடத்தவும், கொள்ளை லாபம் அடிக்கவும் டாஸ்மாக்கை ஒரு கருவியா பயன்படுத்தினாங்க. நீங்க அதெல்லாம் செய்ய மாட்டீங்க. ஸோ, மதுவை பிரைவேட் கிட்ட ஒப்படைச்சிடலாம் அங்கிள்.

கடை பிரைவேட்டா இருந்தாலும், அரசுக்கு வரவேண்டிய வருமானம், வரி மூலமாக வரணும், அதே போல சரக்கு விலைகளை கட்டுப்படுத்துற அதிகாரம் உங்க கையில் தான் இருக்கணும். இதனால பார்களில் நடக்குற மாமூல், லஞ்சம், சுகாதார கேடு, கொள்ளை விலை எல்லாம் ஒழிஞ்சிடும்.

டான்ஜெட்கோ



மின்சார வாரியம்னு சொல்லிகிட்டு இருந்தோம். இப்ப மூன்று கம்பெனியா பிரிச்சு வேற பெயர்கள் வச்சிட்டாங்க. ஆனா, ஊழலும் நஷ்டமும் மட்டும் அப்படியே தொடருது. உங்க மின்சார அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை சொல்லுது, நம்ம மின் வாரியத்துக்கு ரூ.2.45 லட்சம் கோடிக்கு மேல கடன் இருக்குன்னு. தினமும் பல கோடிக்கும் மேல மின்சார திருட்டு நடக்குதாமே அங்கிள்? அப்புறம் எப்படி நஷ்டம் வராம இருக்கும். அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாமே பயங்கர பழசாகி, ரிப்பேர் பண்ண முடியாத அளவுக்கு சிதிலமாகி இருக்கிறதா 'ஏஐ' கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.

தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரத்துல கால் பங்கு தான் அரசின் மின் நிலையங்கள் தயாரிக்கிறாங்க. முக்கால் பங்கு மின்சாரத்த தனியார்கிட்டயும் வெளி மாநில அரசுகள்கிட்டயும் தானே வாங்குறோம்.

மின்சார உற்பத்தியையும், மின்சார வினியோகத்தையும் நடத்தும் அரசின் நிறுவனத்தை மொத்தமா தனியார்கிட்ட விட்டுட்டா என்னவாம்? நம்ம ஸ்டேட்ல எந்த ஊர்லயாச்சும், யாராவது ஒருத்தர், 24 மணி நேரமும் தடை இல்லாம, ஓல்ட்டேஜ் டிராப் இல்லாம மின்சாரம் கிடைக்குதுனு சொல்ல முடியுமா, அங்கிள்? சான்சே இல்ல. ஒயர், கம்பி, டிரான்ஸ்பார்மர், மின் கம்பம்னு பொருள் கொள்முதல் செய்றதுல ஆரமிச்சு, மின்வாரிய ஹெட் ஆபீஸ்ல ஒவ்வொரு படிக்கட்டும் ஒரு ஊழலுக்கு சாட்சியா இருக்குன்னு எங்க பெரியப்பா சொல்லுவார், அங்கிள். அவர் அதுல வேலை பார்த்து ரிடயரான ஹானஸ்ட் ஆபீசர்.

இன்னும்70,000 ஆட்கள்பற்றாக்குறை; ஆள் எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னார். ஸ்மார்ட் மீட்டர் வாங்க வேண்டும், 5000 ட்ரான்ஸ்பார்மர் வரை வாங்க வேண்டும், ஸ்மார்ட் கிரிட் வேண்டும், புதிய சப்-ஸ்டேஷன் கட்ட வேண்டும், 'ஹை வேல்டோஜ் கிரிட்' வேலைகள் இன்னும் முடிக்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் ஒரு லட்சம் கோடி தேவை என்று 'ஏஐ' சொல்கிறது.

இதை சமாளிக்க ஐந்து வருடத்தில் படிப்படியாக எல்லா ஊரிலேயும் மின் வினியோகம் தனியாரிடம் கொடுத்தால் இந்த செலவை அவர்களே செய்வார்கள். மும்பைல சித்தி வீட்டுக்கு போயிருந்தோம் அங்கிள். அங்கே பவர் கட், லோ வோல்ட்டேஜ் வார்த்தைகளே தெரியலை. பிரைவேட் கம்பெனிஸ் தான் பவர் சப்ளை செய்றாங்க. ஒரு கம்பெனி பிடிக்கலைன்னா இன்னொரு கம்பெனிக்கு மாறிக்கலாம். மொபைல் போன் போர்ட்டிங் மாதிரி.

விஜய் அங்கிள், மின்சார விநியோகத்தை பிரைவேட் கிட்ட கொடுத்தாலும், ஏழைகளுக்கு நீங்க தரேன்னு சொன்ன 200 யூனிட் இலவச மின்சாரமும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும் கண்டிப்பா தொடரணும். அந்த பணத்தை நேரடியா அவங்க அக்கவுன்டுக்கே (DBT) அரசாங்கம் அனுப்பி வைக்கலாம்.

அரசுப் பேருந்துகள்



இதான் நம்ம அடுத்த டாப்பிக், அ ங்கிள். திருநெல்வேலில எனக்கு ஒரு அத்தை இருக்காங்க. அவங்க கல்யாணத்துக்கு தாத்தா 150 பவுன் நகை போட்டார்னு பெருமையா சொல்லுவாங்க. அவர் பஸ் கம்பெனி வச்சிருந்தாராம். 4 பஸ் தான் அங்கிள்; ஆனா நல்ல வருமானமாம்.

நம்ம அரசுக்கு சொந்தமா 22,000 பஸ்கள் இருந்தும், பல ஆயிரம் கோடி நஷ்டம் எப்படி வந்துது, அங்கிள்? எத்தனையோ வருஷம் முன்னாடி ரிட்டயரான பஸ் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய கிராஜுவிடி, பென்ஷன்லாம் இன்னும் தர முடியாம போக்குவரத்து கழகங்கள் திணறுதாமே? ஐகோர்ட் கண்டிச்சு சொல்லியும் கொடுக்கல. இருந்தாதானே கொடுப்போம்னு சொல்றாங்களாம். என்ன காரணம்னு பார்த்தா, இதுலயும் ஊழல் தான். பஸ்கள் எல்லாம் ரொம்ப பழசாகி, மெயின்டனன்ஸ் இல்லாம கஷ்டப்பட்டு ஓடுது. மாத்துறதுக்கு டயர் கூட போதுமான ஸ்டாக் இல்லையாம்.

ஒரே தீர்வு, பஸ் போக்குவரத்தை பிரைவேட் கிட்ட கொடுத்துடுங்க. புதுசு புதுசா மாடர்ன் பஸ்களை வாங்கி ஓட்ட சொல்லுங்க. பஸ் பிரைவேட் ஆனாலும், டிக்கெட் விலை அரசு நிர்ணயம் செய்யணும், ஊழியர்கள் சம்பளத்த அரசு நிர்ணயிக்கணும், லாபமோ, நஷ்டமோ எல்லா ரூட்லயும் ஓட்ட வேண்டும், எங்களை மாதிரி படிக்கிற பசங்களுக்கான ப்ரீ பஸ் பாஸ், ஏழை பெண்களுக்கான இலவச பஸ் பயணம் கண்டிப்பா நீடிக்கணும். அதுக்கான காசை கவர்மென்ட் அந்த கம்பெனிகளுக்கு கணக்கு பார்த்து கரெக்ட்டா செட்டில் பண்ணிடலாம்.

ரிட்டர்யர்டு ஆன ஊழியர்களுக்கு, பி.எப்., கிராஜுவிடி கொடுக்க முடியாமல் இருப்பதினால்... முடிந்தால் பஸ் ஊழியர்களை 100 பேராய் ஒரு கோ-ஆப்ரடிவ் அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு குறிப்பிட்ட 10 ரூட்கள் பஸ்களை குடுக்கலாம். ஊழியர்களை, பஸ் முதலாளியாக ஆக்கிய பெருமை உங்களை சேரும்.

மீதி இருக்கும் ரூட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

பழைய திராவிட ஆட்சி ஊழலுக்கு கூட இருந்த அதே அதிகாரிகள் இன்று டிபார்ட்மென்ட் மாறி இருக்கிறார்களே தவிர, அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும் அங்கிள், பழைய அரசியல்வாதிகள் போல இவர்களுக்கும் 'லீவ்' கொடுத்தால் ஒரு வேளை நிர்வாகத்தில் மாற்றம் வரலாம். இவ்ளோ தான் அங்கிள், நான் சொல்ல வந்த பாயின்ட்ஸ்.

நீங்க இதையெல்லாம் பிரைவேட் கிட்ட கொடுக்கப் போறீங்கன்னு தெரிஞ்சா, உங்களோட கூட்டணி கட்சிகள், அதே பழைய வாதங்களை வச்சு கண்டிப்பா எதிர்ப்பாங்க அங்கிள். எதிர்க்கட்சி மீடியாக்களும் இதை எளிய மக்களுக்கு எதிரான விஷயம் மாதிரி காட்டி, பெரிய சட்டம் -ஒழுங்கு பிரச்னையை உருவாக்க பார்ப்பாங்க.

நம்ம நாடு சுதந்திரம் அடைஞ்ச புதுசுல பிரைவேட் கம்பெனிங்க கிடையாது. அதனால, கவர்மென்ட் பெரிய பெரிய ஆலைகள் கட்டி, பிசினஸ் பண்ண வேண்டியிருந்தது. இப்போ காலம் மாறிடுச்சு. வளர்ந்த நாடுகள்ல ராணுவம், விண்வெளி மாதிரியான பெரிய துறைகளே பிரைவேட் கையில் தான் இருக்கு.

மத்திய அரசே நியூக்ளியர் பவர் பிளான்ட் தனியார் அமைக்கலாம் என்று சொல்கிறது... அப்படி இருக்கும்போது நம்ம அரசாங்கம் ஏன் பஸ் ஓட்டணும், தெரு தெருவா சரக்கு விக்கணும்?

டியர் விஜய் அங்கிள், இப்ப நான் உங்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி சொல்ல போறேன். நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி தாத்தா அரசியல் கட்சி ஆரம்பிக்க நினைச்சப்போ, சி.எம்.,ஆ வந்தா, லீ குவான் யூ மாதிரி துணிச்சலா செயல்பட்டு, தமிழ்நாட்டை சிங்கப்பூர் போல மாத்தணும்னு நினைச்சாராம். அந்த லீ குவான் யூவோட குட்டி ஸ்டோரி இது:

1959-ல லீ குவான் யூ சிங்கப்பூரோட பிரைம் மினிஸ்டரா வந்தார். அப்போ அந்த நாடு எப்படி இருந்துச்சு, தெரியுமா? அரசாங்கத்துல எந்த பக்கம் பார்த்தாலும் பயங்கர லஞ்ச ஊழல், வறுமை, வன்முறை. வெளிநாட்டுகாரங்க டூரிஸ்டா கூட சிங்கப்பூருக்கு வர பயந்துகிட்டு இருந்த காலம்.

பி.எம்., ஆனதும் சிங்கப்பூரை சொர்க்கமா மாத்துவேன்னு சபதம் போட்டு ஆட்சிக்கு வந்தார் லீ. இப்ப உங்களுக்கு இருக்குற மாதிரி, அப்போ லீயை சுத்தியும் அதே பழைய ஊழல் அதிகாரிகள் தான் இருந்தாங்க. தினமும் 10 பேர் 20 பேரை போஸ்ட் விட்டு துாக்கியடிச்சா எதுவும் மாறிட போறது இல்லைனு, ஆரம்பத்துலேயே புரிஞ்சுகிட்டார் லீ. அதிகாரிகளை மாத்தி டைம் வேஸ்ட் பண்ணல; ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாத்தினார்.

'அரசாங்கத்தோட வேலை பிசினஸ் பண்றது இல்ல, மக்களுக்கு நல்லாட்சி தர்றது மட்டும்தான்' அப்டீங்றதுல லீ ரொம்ப உறுதியா இருந்தார். எத்தனை கணக்குகள் போட்டாலும், கடைசில வர்ற விடை ரோட்டி கப்டா அவுர் மக்கான். சாப்பாடு, துணிமணி, வீடு. ஊழலை ஒழிச்சாலே அந்த மூன்றையும் கொடுத்துற முடியும்னு நம்பினார். ஆனா, நம்மூர் மாதிரி அங்க படிச்ச, படிக்காத பணியாளர்கள் அதிகம் கிடையாது. பற்றாக்குறை. என்ன செஞ்சார் தெரியுமா?

டெக்னாலஜிய துணைக்கு சேர்த்துகிட்டார். கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பு, மீடியாக்களின் நெகட்டிவ் விமர்சனம் எதையும் கண்டுக்கவே இல்லை. உங்கள மாதிரி தான், அங்கிள். மீடியாவுக்கு பேட்டி கொடுத்து நேரத்தையும் அமைதியையும் கெடுக்கல. டெக்னாலஜியை வச்சு ஊழலுக்கு 'நோ' சொன்னார்.

அதோட ரிசல்ட் என்ன? வெறும் 30 வருஷத்துல சிங்கப்பூர் உலகத்திலேயே நம்பர் 1 பணக்கார, சுத்தமான நாடா மாறி ஹிஸ்டரி கிரியேட் பண்ணியிருக்கு! சிங்கப்பூர் மாதிரி நம்ம நாடும் மாறாதான்னு பலரையும் ஏங்க வச்சிருக்கு. அதிகாரிகள், ஊழியர்கள், எதிர்க்கட்சிகள், மீடியா.. யாருமே 'லீ'க்கு சப்போர்ட் பண்ணல. ஆனா, மக்கள் அவர் பின்னால நின்னாங்க. அதனால அவர் சாதிக்க முடிஞ்சுது... சரித்திரம் படைக்க முடிஞ்சுது.

60 வருஷத்துக்கு முன்னாடி சிங்கப்பூர்ல 'லீ' எந்த இடத்ல நின்னாரோ, அதே மாதிரி இன்னிக்கு தமிழ்நாட்ல அதே இடத்துல நீங்க நிக்கிறீங்க, அங்கிள்.

புதிய வரலாறு எழுத உங்களுக்காக காத்திருக்கிறது காலம்.

உங்க பிரச்னைகள் எல்லாருக்கும் புரியுது, அங்கிள். எதிர்க்கட்சிகள் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க. சில மீடியாக்கள் நீங்க சறுக்குவீங்களானு வெய்ட் பண்றாங்க. சிஸ்டத்துக்கு உள்ளேயே இருந்துகிட்டு, அதே சிஸ்டத்துல ஊறிப்போன ஆட்கள வச்சுகிட்டு, சிஸ்டத்தை எப்படி மாத்த முடியும்?னு நல்லவங்க திகைப்போட பாத்துகிட்டு இருக்காங்க.

தமிழ்நாட்டோட கடன் ரூ.10 லட்சம் கோடியை நெருங்குது. நஷ்டத்துல ஓடுற கம்பெனிகளை கவர்மென்ட் சுமக்கறதுனால நஷ்டம் கூடுமே தவிர குறையாது. இதையெல்லாம் விட்டுட்டு அரசு வெளியே வந்தாலே 80% லஞ்சம் தானா குறைஞ்சிடும். சிஸ்டத்தை மாத்துறது இமயமலைய நகர்த்துற மாதிரி கஷ்டமான விஷயம் தான் அங்கிள்.

ஆனா, உங்ககிட்ட இதுவரை எந்த தலைவரிடமும் பார்க்காத அசாத்திய துணிச்சலும், உறுதியான மனசும் இருக்குன்னு நாங்க நம்புறோம். லீ குவான் யூ மாதிரியான வரலாற்று மாற்றத்தை உங்களால மட்டும்தான் பண்ண முடியும்.

மாற்றத்துக்காக நாங்ககாத்துட்டு இருக்கோம் விஜய் அங்கிள்!

ஒன் மோர் ரிக்வெஸ்ட், அங்கிள், மாதம் மாதம் 'மன் கி பாத்' நிகழ்ச்சி வழியா பிரைம் மினிஸ்டர் மோடி தாத்தா பண்ற மாதிரி, மாதம் முதல் சண்டே உங்க தாட்ஸ் பத்தி டிவியில 'உங்கள் bro பேசுறேன்' ப்ரோகிராம் மூலமாக எங்க கூட ஷேர் பண்றீங்களா, ப்ளீஸ்.

இப்படிக்கு,

உங்கள் மீது பேரன்பும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்ட ஒரு பத்தாம் வகுப்பு மாணவி.

பி.கு: கோடிக்கணக்கான குட்டீஸ்களின் எதிர்பார்ப்புகளையே இந்த லெட்டரில் நான் எதிரொலித்து இருப்பதாக நம்புகிறேன். ஆகவே, என் பெயர் தேவையில்லை.

ஆல் தி பெஸ்ட், விஜய் அங்கிள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us