விவசாயிகளுக்கு துணை நின்றதால் என் குடும்பத்திற்கு மிரட்டல் வந்தது: முன்னாள் தலைமை நீதிபதி பகீர்
விவசாயிகளுக்கு துணை நின்றதால் என் குடும்பத்திற்கு மிரட்டல் வந்தது: முன்னாள் தலைமை நீதிபதி பகீர்
ADDED : நவ 02, 2025 11:31 PM

அமராவதி: ''விவசாயிகளுக்கு எதிராக என்னை பணிய வைக்க, என் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மிரட்டல்களுக்கும் ஆளானேன்,'' என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.
ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சியின்போது, அமராவதியை தலைநகராக உருவாக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக விசாகப்பட்டினம், அமராவதி மற்றும் கர்னுால் என மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால், அமராவதிக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னடைவு மேலும் மிகப்பெரிய அளவில் போராட்டமும் நடந்தது. அப்போது நீதிமன்றம் விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரவிட்டதால், ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
தற்போது ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றதை அடுத்து, அமராவதியை தலைநகராக உருவாக்கும் திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில், அமராவதியில் உள்ள வி.ஐ.டி., பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.ரமணா, ஓய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ''விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டனர்,'' என அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
ஒரு காலத்தில் என் குடும்பத்தினரை கூட அரசியல்வாதிகள் குறிவைத்தனர். அவர்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்து, என்னை பணிய வைக்க பார்த்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக யாரெல்லாம் செயல்பட்டார்களோ, அவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டனர்.
அந்த சமயத்தில், அரசியல் தலைவர்களால் கூட அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப முடியவில்லை. அப்போது நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தான் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்தனர்.
துணிச்சல் அரசுகள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், நீதிமன்றங்களும், சட்டத்தின் ஆட்சியும் என்றும் மாறாது; எப்போதும் நிலையாக இருக்கும்.
அரசு இயந்திரத்தை எதிர்த்து நின்ற அமராவதி விவசாயிகளின் துணிச்சலை பாராட்டுகிறேன். விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
நீதித் துறை மற்றும் ஜனநாயக நடைமுறைகள் மீது விவசாயிகள் வைத்த நம்பிக்கைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

