தான்சானியா நாட்டு பருப்புக்கு மியான்மர் நாட்டு விலை அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு ஏற்படும் அபாயம்
தான்சானியா நாட்டு பருப்புக்கு மியான்மர் நாட்டு விலை அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு ஏற்படும் அபாயம்
UPDATED : செப் 05, 2025 01:27 AM
ADDED : செப் 05, 2025 12:18 AM

சென்னை:ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக, 60,000 டன் துவரம் பருப்பு வாங்குவதற்கு தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய, 'டெண்டரில்' பங்கேற்ற சில நிறுவனங்கள், அண்டை நாடான மியான்மரின் தரமான பருப்புக்கான விலையை குறிப்பிட்டு, குறைந்த விலை உடைய ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டின் பருப்பை வழங்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளன.
அந்த பருப்பை வாங்கினால் அரசுக்கு, 90 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
டெண்டர் தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது. இதை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் வாங்குகிறது.
அதன்படி, நம் நாட்டில் கிடைக்கும் முழு துவரம் பருப்பு, இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு உடைத்தது என, ஏதேனும் ஒரு பருப்பை, 60,000 டன் வாங்க, கடந்த மாதம் 5ம் தேதி, 'டெண்டர்' கோரப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்புக்கான டெண்டரில், 16 நிறுவனங்களும்; நம் நாட்டின் துவரம் பருப்புக்கான டெண்டரில், 15 நிறுவனங்களும்; கனடா பருப்புக்கு ஐந்து நிறுவனங்களும் பங் கேற்றன. இந்த நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் உள்ளிட்ட விபரங்கள், 31ம் தேதி திறக்கப்பட்டன.
அதில், இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு குறைந்த விலைப்புள்ளியாக, கிலோவுக்கு, 90 ரூபாயும், நம் நாட்டின் பருப்புக்கு குறைந்த விலைப்புள்ளியாக, 99 ரூபாயும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சில நிறுவனங்கள், மியான்மர் நாட்டின் தரமான பருப்புக்கான விலையை டெண்டரில் குறிப்பிட்டு விட்டு, குறைந்த விலை உடைய ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டின் பருப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தர பரிசோதனை இதுகுறித்து, உணவு துறை அதிகாரிகள் கூறியதாவது:
வாணிப கழக டெண்டரில், 'இறக்குமதி செய்யப்படும் பருப்பு' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால், டெண்டரில் பங்கேற்றுள்ள சில நிறுவனங்கள், மியான்மர் நாட்டில் உள்ள தரமான பருப்புக்கு உரிய விலையை குறிப்பிட்டுள்ளன.
ஆனால், அதற்கு மாதிரியாக தான்சானியா நாட்டின் பருப்பை வழங்கிஉள்ளன. மியான்மரில் கிலோ பருப்பின் விலை, 85 ரூபாய். ஆனால், தான்சானியா பருப்பின் விலை, 75 ரூபாய். இந்தியாவில் விளையும் தரமான துவரம் பருப்பு விலை, 95 ரூபாயாக உள்ளது.
டெண்டரில் பங்கேற்ற சில நிறுவனங்கள், மியான்மர் பருப்பின் விலையை வழங்கி விட்டு, தான்சானியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் கிடைக்கும் விலை குறைந்த பருப்பை வழங்க உள்ளன. இருப்பினும், கிலோவுக்கு 90 ரூபாய் கேட்டுள்ளன.
இதை, பருப்பின் தரத்தை அறிய வழங்கப்பட்ட மாதிரிகளின் சோதனையில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும், அந்நிறுவனங்களிடம் இருந்து பருப்பு வாங்குவதற்கான, டெண்டர் வழங்க முயற்சிகள் நடக்கின்றன.
இதனால் கிலோவுக்கு, 15 ரூபாய் என 60,000 டன்னுக்கு கணக்கிட்டால், 90 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படும்.
20,000 டன் மேலும், ஒரு நிறுவனமானது, தலா, 4,000 டன் என, மூன்று முறை அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட டெண்டர் விதிகளையும் பூர்த்தி செய்யவில்லை.
ஆனாலும், அந்நிறுவனத்தை நிராகரிக்காமல், பருப்பு வாங்கும் முயற்சியில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அதிக விலைக்கு பருப்பு வாங்கும் டெண்டரை ரத்து செய்து விட்டு, மாதந்தோறும் தலா, 20,000 டன் என வாங்க வேண்டும். இதனால், நம் நாட்டில் கிடைக்கும் தரமான துவரம் பருப்பை வாங்கி மக் களுக்கு வினியோகிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.