பிரமாண்ட ஜம்பு சவாரியுடன் மைசூரு தசரா விழா நிறைவு!: குவிந்த மக்களால் குலுங்கியது அரண்மனை நகரம்
பிரமாண்ட ஜம்பு சவாரியுடன் மைசூரு தசரா விழா நிறைவு!: குவிந்த மக்களால் குலுங்கியது அரண்மனை நகரம்
ADDED : அக் 03, 2025 01:23 AM

மைசூரு:மைசூரு தசராவின் ஜம்பு சவாரியை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர்களை துாவி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கர்நாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, பா.ஜ., - எம்.பி.,யான, மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் துவக்கி வைத்தனர்.
கடந்த, 11 நாட்களாக நடந்து வந்த மைசூரு தசரா திருவிழா, பிரமாண்ட ஜம்பு சவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது. இதை காண, லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால், மைசூரு நகரமே குலுங்கியது.
பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை, புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஷ்டாக் செப்., 22ல் துவக்கி வைத்தார். பத்து நாட்கள் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக, தசரா துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழுவின் நிகழ்ச்சிகளும், அதற்குரிய இடங்களில் சிறப்பாக நடந்தன.
மைசூரு தசராவின் மற்றொரு சிறப்பு, மின்னொளி அலங்காரங்கள். இதை பார்க்கவே பலரும் இரவு நேரத்தில் வாகனத்தில், 'ஜாலி டூர்' சென்றனர். நகரின் 200 கி.மீ.,க்கும் மேற்பட்ட சாலைகளிலும், சதுக்கங்களிலும் மின் விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
* ஜொலிப்பு
மின் விளக்குகளால் ஜொலித்த அரண்மனை முன் நின்று பலரும், 'செல்பி' எடுத்து கொண்டனர். ஒவ்வொரு நாளும் மக்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. சாலைகளில் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.
தசரா விழாவின் உச்சகட்டமான ஜம்பு சவாரியை பொது மக்கள் பார்க்கும் வகையில், அம்பா விலாஸ் அரண்மனை முன்பும், வளாகத்தின் இருபுறமும், 45 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆர்.சி.பி., வெற்றி விழாவில் நடந்தது போன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
* 58 ஊர்திகள்
விஜயதசமி நாளான நேற்று காலை, அரண்மனையில் உள்ள ஆயுதங்களுக்கு மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் பூஜை செய்தார். மதியம் அரண்மனைக்கு வெளியே உள்ள கோட்டே ஆஞ்சநேயர் கோவிலுக்கு முன்பாக உள்ள நந்தி கொடிக்கு, முதல்வர் சித்தராமையா பூஜை செய்தார்.
பின், திறந்த ஜீப்பில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் மஹாதேவப்பா ஆகியோர் ஊர்வலமாக, பொது மக்களை பார்த்து கையசைத்தபடி விழா மேடைக்கு சென்றனர்.
அதன்பின், கர்நாடகத்தின் பாரம்பரிய கலையான வீரகாசே, கன்சாலே, தமடே, டொல்லு குனிதா கலைஞர்கள், தங்கள் மாவட்டத்தின் கலாசார சிறப்புகளை, இசை, நடனம் மூலம் வெளிப்படுத்தினர்.
அதை தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள், வாரியங்கள் சார்பில், அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் உட்பட, 58 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இரண்டு மணி நேரம் இந்த ஊர்வலம் நடந்தது.
* 750 கிலோ
மாலையில், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில், சாமுண்டீஸ்வரி தேவி விக்ரகத்தை சுமந்தபடி, 'அபிமன்யு' யானை ஆடி அசைந்து விழா மேடை அருகில் வந்தது.
சாமுண்டீஸ்வரி தேவிக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, பா.ஜ., - எம்.பி.,யான மன்னர் குடும்பத்தின் யதுவீர், அமைச்சர் மஹாதேவப்பா, நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்சகர் ஆகியோர் மலர்கள் துாவி வணங்கினர்.
தேசிய கீதத்துக்கு பின், 21 முறை பீரங்கி குண்டுகள் முழங்கின. அனைத்து யானைகளும் தங்கள் தும்பிக்கையை உயர்த்தி, அம்மனை வணங்கின. அனைவரும், 'சாமுண்டீஸ்வரி' என கோஷமிட்ட பின், ஊர்வலம் புறப்பட்டது.
நடப்பாண்டு ஆறாவது முறையாக ரூபா, காவேரி யானைகள், அபிமன்யுவுடன் இணைந்து சென்றன. மற்ற யானைகள் பின்தொடர்ந்து சென்றன. அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கே.ஆர்., சதுக்கம், சாயாஜி ராவ் சாலை, ஆயுர்வேதிக் சதுக்கம், பம்பு பஜார் வழியாக பன்னிமண்டபம் வரையிலான 5 கி.மீ., துாரத்தை கடக்க, இரண்டு மணி நேரமானது. யானைகள் செல்லும் வழியில், மக்கள் தங்கள் மொபைல் போனில், 'க்ளிக்' செய்து கொண்டே இருந்தனர்.
யானைகள் செல்லும் வழித்தடத்தில் உள்ள பழைய கட்டடங்களில் பொது மக்கள் ஏற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த கட்டடங்களில் ஏறாத வகையில், தடுப்புகளும் போடப்பட்டிருந்தன.
இரவு 7:00 மணியளவில், ஜம்பு சவாரி பன்னி மண்டபம் மைதானத்தை அடைந்தது. அதன்பின், மைதானத்தில் போலீசாரின் டார்ச்லைட் எனும் தீப்பந்த பரேடை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைத்து பேசினார். பின், மைசூரு தசரா குறித்து கன்னடம், ஆங்கில மொழியில் தீப்பந்தம் மூலம் போலீசார் செய்து காண்பித்தனர். இத்துடன், மைசூரு தசரா விழா நிறைவு பெற்றது.
ஜம்பு சவாரியை ஒட்டி, நகரில் 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 30 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஜம்பு சவாரி நடக்கும் இடத்தை சுற்றிலும், கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
.