வேட்டையாடப்படும் படை தலைவர்கள்; வேகத்தை இழக்கும் நக்சல் அமைப்புகள்
வேட்டையாடப்படும் படை தலைவர்கள்; வேகத்தை இழக்கும் நக்சல் அமைப்புகள்
ADDED : செப் 27, 2025 01:46 AM

சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் நக்சல் நடமாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த நக்சல்கள், அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் சென்று பதுங்குவதும், அங்கிருப்பவர்கள் தெலுங்கானாவில் மறைந்து வாழ்வதும் தொடர்கதையாக இருந்த நிலையில், சமீபத்தில் இரு நக்சல் தலைவர்கள் கொல்லப் பட்டது, அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
பரிசுத்தொகை நக்சல்களின் மத்திய கமிட்டியில் உயர்மட்ட தலைவர்களாக இருந்த ராமச்சந்திர ரெட்டி, 63, மற்றும் கதாரி சத்யநாராயணா ரெட்டி, 67, ஆகியோர் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருந்து, அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
ஆயுதம் ஏந்திய நக்சல்களின் பாதுகாப்புடன் சுற்றி வந்த அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு, 40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், மஹாராஷ்டிரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள சத்தீஸ்கர் நாராயண்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த இருவரை, பாதுகாப்பு படையினர் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர்.
அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் இருந்து ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் வாயிலாக, சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் நக்சல் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்தன.
பொதுவாக, நக்சல்கள் ஒரு குழுவாக செயல்பட்டாலும், அதன் தலைவர்கள் தனித்தனியே இருந்து வழிநடத்துவது வழக்கம்.
கடந்த 20 ஆண்டுகளில், ஒரே சமயத்தில் இரு நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டது இதுவே முதன்முறை என, பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நடந்த மோதல்களில், ஒன்பது மத்திய குழு உறு ப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
உறுதிமொழி நிச்சயம்
ஒரு மத்திய குழு உறுப்பினர் சரணடைந்தார்-. மீதம் எட்டு பேர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, நக்சல் மத்திய குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அழிக்கப்பட்டதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நக்சல்களின் பிடியில் சிக்கியிருந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானாவும், தற்போது நக்சல் இல்லாத மாநிலங்களாக முன்னேறி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு, பாதுகாப்பு படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியே காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம், இரு தலைவர்களும் ஒன்றாக சந்தித்து பேசியதால், வேறு நாசவேலைக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
உயர்மட்ட நக்சல் தலைவர்களில் ஒருவரான சோனு, ஆயுதங்களை கைவிட தயாராக இருந்தாலும், ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது, நக்சல்களின் அமைப்பு ஆட்டம் காண துவங்கியுள்ள நிலையில், மேலும் பலர் சரணடைய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், அடுத்தாண்டு, மார்ச்சில் நக்சல்கள் இல்லாத நாடாக இந்தியா இருக்கும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதிமொழி நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதியாகிறது.
- நமது சிறப்பு நிருபர் -