ஒரு கோடி பேருக்கு வேலை: பீஹாரில் தேஜ கூட்டணி வாக்குறுதி
ஒரு கோடி பேருக்கு வேலை: பீஹாரில் தேஜ கூட்டணி வாக்குறுதி
ADDED : அக் 31, 2025 11:40 AM

பாட்னா: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை பீஹாரில் தேஜ கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம் மாநில சட்ட சபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்ட தேர்தல் வரும் நவ., 6ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது.
இதையொட்டி, லாலு வின் ஆர்.ஜே.டி., எனப் படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (அக் 31) தேஜ கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜ தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:
* ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
* பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
* ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு முதுகலை பட்டம்  வரை இலவச கல்வி வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.
* பீஹார் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.
* பீஹாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
* தேஜ கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும்.
* பீஹாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.
* இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும்  அமைக்கப்படும்.
* பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
* புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.

