நேருவின் ஆவணங்கள் தனியார் சொத்து அல்ல: காங்கிரசுக்கு மத்திய அரசு பதிலடி
நேருவின் ஆவணங்கள் தனியார் சொத்து அல்ல: காங்கிரசுக்கு மத்திய அரசு பதிலடி
ADDED : டிச 17, 2025 10:32 PM

புதுடில்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவின் ஆவணங்கள் தொடர்பாக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கூறியிருந்த நிலையில்,' அவை சோனியாவிடம் உள்ளதாகவும், அதுதனிப்பட்ட சொத்து அல்ல. அவர் ஒப்படைக்க வேண்டும்' என மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு டில்லியில் வசித்த தீன் மூர்த்தி பவன் இல்லத்தில், அவரது நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை சார்பில் இது செயல்பட்டு வந்தது.
அருங்காட்சியகம்
கடந்த 1971ல், நேருவின் வாரிசான, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, தன்னிடம் இருந்த நேரு தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதற்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வழங்கினார். மொத்தம், 51 பெட்டிகளில் நேரு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. இவற்றில், பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோருக்கு நேரு எழுதிய கடிதங்களும் அடங்கும். ஜெயபிரகாஷ் நாராயண், பத்மஜா நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், அருணா ஆசிப் அலி, பாபு ஜகஜீவன் ராம் போன்ற தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவற்றில் அடங்கும்.
கடந்த 1984ல் இந்தி ராவின் மறைவுக்குப் பின், நேருவின் வாரிசாக சோனியா மாறினார்.கடந்த 2008ல், ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்துக்கு வழங்கிய, 51 பெட்டிகளில் உள்ள பொருட்களை அவர் திரும்பப் பெற்றார். தற்போது அவரது தனிப்பட்ட பராமரிப்பில் உள்ளன.
ஆவணங்கள்
தற்போது இந்த அருங்காட்சியகத்தை பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு அனைத்து பிரதமர்கள் தொடர்பான பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, நேரு தொடர்பான கடிதங்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப அளிக்கும்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் கடிதம் எழுதியது. ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
மாயமாகவில்லை
இந்நிலையில், பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் இருந்து நேரு தொடர்புடைய குறிப்பிட்ட ஆவணங்கள் ஏதும் மாயமானதா? அவை சட்டவிரோதமாக முறையற்ற ரீதியில் அகற்றப்பட்டதா என லோக்சபாவில் பாஜ எம்பி சம்பித் பாத்ரா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ெஷகாவத்,' பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் நடப்பாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேரு தொடர்பான ஆவணங்கள் எதுவம் மாயமானதாக கண்டறியப்படவில்லை. அருங்காட்சியகம் வசமுள்ள ஆவணங்கள் ஆண்டுதோறும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பாக கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை,' என பதிலளித்து இருந்தார்.
எப்போது
இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ' இறுதியில் உண்மை வெளியிடப்பட்டுவிட்டது. இனி மன்னிப்பு கேட்கப்போவது எப்போது,' என கேள்விஎழுப்பி உள்ளார்.
பதிலடி
இந்நிலையில், மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2008 ம் ஆண்டு ஏப்ரல் 29 ம் தேதி சோனியாவின் பிரதிநிதியான எம்.வி.ராஜன், முன்னாள் பிரதமர் நேருவின் அனைத்து தனிப்பட்ட குடும்ப கடிதங்கள் மற்றும் ஆவணங்களையும் சோனியா திரும்ப பெற விரும்புகிறார் என கடிதம் எழுதியிருந்தார். அதே ஆண்டு நேரு குறித்த ஆவணங்கள் சோனியாவிற்கு அனுப்பப்பட்டன.
அந்த ஆவணங்களை திரும்ப கொடுப்பது தொடர்பாக பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ( பிஎம்எம்எல்) நிறுவனவம்,தொடர்ந்து சோனியாவுடன் தொடர்பில் இருக்கிறோம். இது தொடர்பாக 2025 ஜன.,28 மற்றும் ஜூலை 03 ஆகிய தேதிகளில் சோனியாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, நேரு குறித்த ஆவணங்கள் எங்கு இருப்பது என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், பிஎம்எம்எல் -ல் இருந்து நேருவின் ஆவணங்கள் மாயமாகவில்லை.
இந்த ஆவணங்கள் இந்தியாவின் முதல் பிரதமர் தொடர்புடையது என்பதால், அது தேசத்தின் ஆவண பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அவை தனிப்பட்ட சொத்து அல்ல. இந்த ஆவணங்கள் பிஎம்எம்எல் நிறுவனத்தின் வசம் இருப்பதும், அவற்றை குடிமக்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக்கு அணுகுவதும் மிகவும் முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

