'வந்தே மாதரம்' விவாதத்தில் நேருவின் உண்மை முகம் வெளிப்படும்: பா.ஜ.,
'வந்தே மாதரம்' விவாதத்தில் நேருவின் உண்மை முகம் வெளிப்படும்: பா.ஜ.,
UPDATED : டிச 08, 2025 05:54 AM
ADDED : டிச 08, 2025 05:49 AM

புதுடில்லி: “பார்லி.,யில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தில், மறைந்த காங்., பிரதமர் நேருவின் உண்மையான முகம் வெளிப்படும்,” என, பா.ஜ., லோக்சபா எம்.பி., சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாடலான, 'வந்தே மாதரம்' இயற்றி, 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை குறிக்கும் வகையில், லோக்சபாவில் இன்று நடக்கும் சிறப்பு விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். ராஜ்யசபாவில் நாளை விவாதம் நடக்கிறது.
நாட்டின் முதல் பிரதமரான காங்கிரசைச் சேர்ந்த மறைந்த நேரு, வந்தே மாதரம் பாடலில் சில வரிகளை நீக்கியதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவாதம் நடக்கிறது. இதற்கிடையே, 'நேருவை இழிவுபடுத்துவதே பா.ஜ.,வின் லட்சியம்' என, பார்லி., - காங்., குழு தலைவர் சோனியா சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், டில்லியில், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது: நேருவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக, சர்தார் வல்லபபாய் படேல், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் பாரம்பரியத்தை திட்டமிட்டே காங்., மூடி மறைத்தது. நேருவின் புகழை நாங்கள் கெடுக்கவில்லை; களங்கம் ஏற்படுத்தவில்லை.
'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் ஜாமினில் வெளியே உள்ள சோனியா, ராகுல் போன்றோர் தான் அவரது பெயரை கெடுக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்ட போது, முஸ்லிம்களை திருப்திப்படுத்த குறிப்பிட்ட சில வரிகளை நேரு நீக்கினார். அதுவே நாடு பிளவுபட வழிவகுத்தது. வந்தே மாதரம் பாடல் குறித்து நடக்கும் விவாதத்தில், அவரின் உண்மையான முகம் வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

