நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் மாயம்; 290 இந்தியர்கள் கதி என்ன?
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் மாயம்; 290 இந்தியர்கள் கதி என்ன?
ADDED : ஆக 28, 2026 05:09 PM

புதுடில்லி: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி மொத்தம் 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாயமாகி இருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த 290 பேர் காணாமல் போய் உள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேபாளத்தில் ஆக. 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பெரு வெள்ளத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர். நேபாளம், திபெத் நாடுகள் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அறிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வரும் அதே தருணத்தில் மாயமாகி இன்னமும் கண்டுபிடிக்காதோர் பட்டியலில் 33 நாடுகளின் குடிமக்களும் அடங்கி இருக்கின்றனர். சோகம் என்னவென்றால் இந்த பட்டியலில் இந்தியா முதலில் இருப்பதுதான். பெருவெள்ளத்தில் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், மாயமாகி இருக்கின்றனர், எத்தனை பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
இதில் இந்தியாவில் இருந்து மட்டுமே 290 பேர் காணாமல் மற்றும் கண்டுபிடிக்க முடியாதோர் பட்டியலில் உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்து, அமெரிக்கர்கள் அதிகம் பேர் மாயமாகி உள்ளனர். அந்நாட்டைச் சேர்ந்த 56 பேர் பற்றிய எந்த தகவல்களும் இதுவரை கண்டறிய முடியவில்லை.
உக்ரைன் நாட்டினர் 53 பேர், மலேசியா மக்கள் 51 பேர், ஆஸ்திரேலியா மக்கள் 35, பிரிட்டன் மக்கள் 33 பேர், கனடா மக்கள் 25 பேர் எங்கு உள்ளனர் என்பது பற்றிய விவரங்களும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நேபாளத்திற்கு சுற்றுலா வந்த கொரியா, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, லாத்வியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், ஐரிஷ்,கஜகிஸ்தான், போர்ச்சுகல் நாடுகளைச் சேர்ந்த மக்களும் எங்கே இருக்கின்றனர் என்பதும் தெரியவில்லை.
