முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் நிதிஷ் குமார்? பீஹார் அரசியலில் பரபரப்பு
முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் நிதிஷ் குமார்? பீஹார் அரசியலில் பரபரப்பு
UPDATED : மார் 04, 2026 06:32 PM
ADDED : மார் 04, 2026 05:32 PM

புதுடில்லி: பீஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஹார் முதல்வரான நிதிஷ் குமார் 75 வயது ஆகிறது. வயது மூப்பு பிரச்னைகளில் அவதிப்பட்டு வருகிறார். இதனால், மகன் நிஷாந்த்தை அரசியலுக்குள் கொண்டு வந்து கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க திட்டமிட்டு வருகிறார். தனக்கு பின் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை மகனிடம் ஒப்படைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதில் ஒன்றில் ராம்நாத் தாக்கூர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மற்றொரு இடத்துக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபாவுக்கு போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேட்புமனு தயாராகிவிட்டதாகவும், நிதிஷ் குமார் கையெழுத்து போட வேண்டியது தான் பாக்கி எனவும் தெரிகிறது.
இதனிடையே ஐஜதவின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, நிதிஷ்குமாருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், நிதிஷ்குமார் பதவி விலகல் குறித்த யூகங்கள் கிளம்பி உள்ளன. அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் லாலன் சிங் நாளை டில்லியில் இருந்து பாட்னாவுக்கு வர உள்ளார். இதுவும் நிதிஷ்குமாரின் பதவி விலகலுக்கான விவாதத்தை அங்கு கிளப்பி உள்ளது.
பாஜ முதல்வர்?
இதனிடையே, பீஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகினால், அடுத்ததாக பாஜவை சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. நிதிஷ்குமார் மகன் நிஷாந்த்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

