அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது போராட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு
அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது போராட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : அக் 19, 2025 10:06 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து போராட்டம் வெடித்தது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அப்போது அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்றினார். அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். அடுத்ததாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு வெளிநாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கும் விதித்தார்.
அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது; சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது. திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவு, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய முடிவுகளையும் டிரம்ப் எடுத்துள்ளார்.
போராட்டம்
டிரம்ப் பதவியேற்றதில் ஏராளமான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவி திட்ட நிதியை பெருமளவு குறைத்துள்ளார்.
டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் வெடித்தது. இங்கு யாரும் மன்னர் இல்லை என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 2500க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் என ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வடக்கு வர்ஜீனியாவில், வாஷிங்டனுக்கு செல்லும் மேம்பாலங்களில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில், அமெரிக்க மூத்த எம்பி பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே உட்பட பல இடங்களில் டிரம்புக்கு எதிராக போராட்டம் நடந்தது.
அதிபர் டிரம்ப் பதில்!
இந்த போராட்டம் குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,'இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது' என்று அவர் தெரிவித்தார். அவர்கள் தன்னை ஒரு மன்னர் என குறிப்பிடுகிறார்கள். நான் மன்னர் இல்லை. அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன்'', என குறிப்பிட்டு உள்ளார்.
டிரம்புக்கு ஆதரவாக குடியரசுக் கட்சித் தலைவர்களும் போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றனர். அமெரிக்காவை வெறுக்கும் நபர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு பேரணிகளை நடத்துவதாகச் சபாநாயகர் மைக் ஜான்சன் சாடியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் போராட்டங்களை ஆதரித்துள்ளனர். ஆனால் போராட்டக்காரர்கள் அமைதியாக இருந்து தங்கள் ஆர்ப்பாட்டத்தை அமைதியாக நடத்துமாறு வலியுறுத்தினர்.