100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்
100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்
UPDATED : டிச 16, 2025 01:31 PM
ADDED : டிச 16, 2025 01:08 PM

நமது டில்லி நிருபர்
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
பார்லியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழித்து, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கடந்த 2005ல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் இன்று (டிச.,16) லோக்சபா கூடியதும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த புதிய மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகம் செய்தார்.
கிராமப்புற வளர்ச்சி
அப்போது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், ''மஹாத்மா காந்தியை நம்புவது மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளையும் மத்திய அரசு பின்பற்றுகிறது. முந்தைய அரசுகளை விட மோடி அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு அதிகம் செய்துள்ளது'', என தெரிவித்தார்.
கடும் எதிர்ப்பு
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ''இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 40% ஆக குறைத்துள்ளது'' என காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டினார். தொடர்ந்து மசோதா மீது அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.
புதிய மசோதா என்ன?
'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025' என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த புதிய மசோதா படி , 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.,க்கள் அமளியை தொடர்ந்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

