UPDATED : செப் 28, 2025 05:45 AM
ADDED : செப் 28, 2025 05:43 AM

திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோத்சவத்தின் போது, தமிழகத்தில் இருந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கப்படும் மங்கள பொருட்களில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனையுடன் சமர்ப்பிக்கப்படும் வெண்பட்டு திருக்குடைகளும் உண்டு. 250 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாரம்பரியம் பின்பற்றப் படுகிறது.
பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவையில், மலையப்ப சுவாமி வீதியுலா வரும் போது, இந்த திருக்குடைகள், சாற்றப்படுவது வழக்கம்.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோத்சவத்துக்காக, ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், 21வது ஆண்டாக திருப்பதி திருக்குடைகள் சமர்ப்பண ஊர்வலம், சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து கடந்த 22ம் தேதி புறப்பட்டு, திருச்சானுாரை நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது.
அங்கு இரு வெண்பட்டு திருக்குடைகளை திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி சமர்ப்பித்தார்.
இதையடுத்து, திருக்குடைகள் ஊர்வலம் திருப்பதி திருமலையை நேற்று காலை, 9:00 மணிக்கு வந்தடைந்தது. மேளதாளம் முழங்க, ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
திருக்குடைகளுக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
பின்னர், ஒன்பது வெண்பட்டு திருக்குடைகளை, ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.
திருக்குடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, செயல் அதிகாரி ஏ.கே.அனில்குமார் சிங்கால், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பனபாகா லட்சுமி, வெமிரெட்டி பிரசாந்தி, வைத்யம் சாந்தாராம், சாம்பசிவ ராவ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
உடன் அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி பட் உடனிருந்தனர்.
திருமலையில் நிருபர்களிடம், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:
கடந்த 5 நாடகள் நடந்த திருக்குடைகள் பாதயாத்திரையில், 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், திருக்குடைகள் மீது பிரார்த்தனைகளை செலுத்தியுள்ளனர். அவர்களின் பிரார்த்தனைகளை எல்லாம் ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்துள்ளோம்.
தேவஸ்தான தலைவர், நிர்வாக அதிகாரி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், திருக்குடைகளை பெற்றுக் கொண்டனர். ஒத்துழைப்பு கொடுத்த தமிழக போலீஸ் மற்றும் ஆந்திர போலீசுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.