/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசி எடுக்கவில்லையா... உடனே டாக்டரை பாருங்க
/
பசி எடுக்கவில்லையா... உடனே டாக்டரை பாருங்க
ADDED : செப் 28, 2025 05:40 AM

உ ணவு செரிமானம், குடல் செயல்பாடுகள், சரியாக இருந்தால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார், கோவை இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன்பிரசாத்.
இன்றைய சூழலில், அதிகம் காணப்படும் குடல்வழி பிரச்னைகள் என்னென்ன ?
அமிலம் அதிகம் சுரத்தல், வயிற்று எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்புண், குடல் அழற்சி நோய், வயிற்றுப்போக்கு, கல்லீரல் கொழுப்பு நோய் மற்றும் பித்தக்கற்கள் சார்ந்த பிரச்னைக்காக, அதிகம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
மன அழுத்தமும், வாழ்வியல் நடைமுறைகளும்குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?
மனஅழுத்தம், வாழ்வியல் நடைமுறை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துடன் இணைந்த ஒன்று. மன அழுத்தம், துாக்கமின்மை, சீரற்ற உணவு, உடற்பயிற்சி இல்லாமை, ஆகியவற்றால் குடலில் நுண்ணுயிரிகளின் சமநிலை பாதித்து, செரிமான கோளாறுகளை உருவாக்குகிறது.
இளம் வயதினருக்கு அமிலத்தன்மை (GERD) பாதிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறதே?
உண்மைதான். துரித உணவு பழக்கவழக்கங்கள், சோடா, புகைப்பிடித்தல், மது, உடல் பருமன் ஆகிய காரணங்களால், இளம் வயதினரிடையே இரைப்பை உணவுக்குழாய் நோய்(Reflux) பிரச்னை அதிகம் காணப்படுகிறது.
குடல் மைக்ரோபயோம் என்பது என்ன... அதன் முக்கியத்துவம் குறித்து கூறுங்கள்...
குடல் மைக்ரோபயோம் என்பது, மனிதர்களின் செரிமான மண்டலத்தில்பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அமைப்பு. இவை சரியாக இருந்தால் தான், நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, ஊட்டச்சத்து கிரகிப்பு அனைத்தும் சரியாக இருக்கும்.இதை மேம்படுத்த, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு, பழம், காய்கறி அதிகம் உண்பது நல்லது.
அடிக்கடி ஆன்டாசிட், பி.பி.ஐ., மாத்திரைகள் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா ?
நீண்ட காலம் மருத்துவர்களின் கண்காணிப்பு இன்றி எடுத்தால், எலும்பு, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று போன்ற அபாயங்கள் வர வாய்ப்புண்டு.
'கொலோனோஸ்கோபி' பரிசோதனை எத்தனை வயதில் அவசியம்?
கொலோனோஸ்கோபி என்பது பெருங்குடல், மலக்குடல் உட்புறத்தை பரிசோதிக்கும் பரிசோதனை. புற்றுநோய், நீண்டகால வயிற்று வலி, நீண்ட நாள் வயிற்று போக்கு, மலத்தில் ரத்தம் போதல் போன்றவைக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு பரிசோதனை.
பொதுவாக 45 வயதிலிருந்து குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங் பரிந்துரைக்கப்படுகிறது. குடும்ப வரலாறு இருந்தால், இன்னும் முன்பே பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது. இதன் வாயிலாக, புற்றுநோய் அறிகுறி தென்பட்டால், முழுமையாக குணப்படுத்தி விடலாம்.
குடல் சார்ந்து எந்த அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாது?
பசியின்மை, மீண்டும் மீண்டும் வயிற்றுப்போக்கு, மலத்தில் அல்லது வாந்தியில் ரத்தம், காரணமில்லாத எடை குறைவு, விழுங்குவதில் சிரமம், தொடர் வயிற்றுவலி போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
இத்துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ன ?
எண்டோஸ்கோப்பி துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு, கேப்சுல் எண்டோஸ்கோபி, மைக்ரோபயோம் அடிப்படையிலான சிகிச்சைகள்ல, இன்று குடல்நோய் மருத்துவத்தில் மாற்றத்தை உருவாக்கியுள்ளன. சிகிச்சை, சிகிச்சைக்கு பிந்தைய வாழ்க்கை முறை எளிதாகியுள்ளது.
drvgm@hotmail.com
99429 32717
பசியின்மை, மீண்டும் மீண்டும் வயிற்றுப்போக்கு, மலத்தில் அல்லது வாந்தியில் ரத்தம், காரணமில்லாத எடை குறைவு, விழுங்குவதில் சிரமம், தொடர் வயிற்றுவலி போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.