அமைச்சர் துரைமுருகன் பிடிவாதத்தால் மணல் குவாரிகள் திறப்பு முடக்கம்: சமரச முயற்சியில் அதிகாரிகள்
அமைச்சர் துரைமுருகன் பிடிவாதத்தால் மணல் குவாரிகள் திறப்பு முடக்கம்: சமரச முயற்சியில் அதிகாரிகள்
ADDED : நவ 08, 2025 03:38 AM

சென்னை: ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 'எம் - சாண்ட்' விற்பனை வெ குவாக அதிகரித்தாலும், கட்டுமான பணிக்கு ஆற்று மணல் வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். இதனால், மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது.
தயாராகினர் தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி, எட்டு குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, புதுக்கோட்டையில், 3; கடலுாரில், 2; தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என, மொத்தம் எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இடங்களில், நவம்பர், 1 முதல் மணல் குவாரிகளை திறக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் தயாராகினர்.
இதுகுறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
புதிதாக திறக்கப்பட உள்ள குவாரிகளில், மணல் அள்ளி யார்டுகளுக்கு கொண்டு வரும் பொறுப்பை ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டும். இதற்காக, மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பா என்ற நபரிடம், மொத்தமாக ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், நாமக்கல் குவாரியை மட்டும், அங்குள்ள பொன்னர், சங்கர் என்ற சகோதரர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
உடன்பாடு ஆனால், ஏற்கனவே இதில் ஒப்பந்ததாரராக இருந்த புதுக்கோட்டையை சேர்ந்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை.
அவருக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்க, அமைச்சர் துரைமுருகன் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதனால், புதிய ஒப்பந்ததாரர்களிடம் பணியை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீர் வளத்துறை அதிகாரிகள், புதிய ஒப்பந்ததாரருக்கு அனுமதி பெறுவதற்காக அமைச்சரிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓரிரு நாட்களில் இதில் உடன்பாடு ஏற்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

