ADDED : அக் 02, 2025 01:41 AM

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் தி.மு.க., அரசு சதி செய்வதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தி.மு.க., அரசு அமைத்த ககன்தீப்சிங் பேடி குழு, இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதிலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தி.மு.க., அரசு மறைமுகமாக உணர்த்தியுள்ளது.
இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்த ஏமாற்று வேலையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில், தி.மு.க., அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது திட்டமிட்ட சதி. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகம். இனியும் தாமதிக்காமல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.