ஆம்னி பஸ்கள் நிறுத்தம் தொடர்கிறது: தமிழக முதல்வர் தலையிட கோரிக்கை
ஆம்னி பஸ்கள் நிறுத்தம் தொடர்கிறது: தமிழக முதல்வர் தலையிட கோரிக்கை
ADDED : நவ 13, 2025 01:19 AM

சென்னை: 'தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள், ஆறாம் நாளாக நேற்றும் இயக்கப்படவில்லை. தமிழக முதல்வர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி கேரள மாநில எல்லையை அடைந்த, தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்களை இயக்காமல் உள்ளனர்.
ஆறாம் நாளாக, நேற்று ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால், ஆம்னி பஸ்களில் 'டிக்கெட்' முன்பதிவு செய்த பயணியர், கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களுக்கு, கேரளாவில் 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதேபோல், கர்நாடகா மாநிலத்தில், 60க்கும் மேற்பட்ட தமிழக ஆம்னி பஸ்களுக்கு, 1.15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதை கண்டித்தும், வரி முறையை முறைப்படுத்த கோரியும், வெளிமாநிலம் செல்லும் ஆம்னி பஸ்களை நிறுத்தி உள்ளோம்.
இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம், 2021ல் மத்திய அரசு உருவாக்கிய, 'ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்' படி, தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பஸ்களுக்கு, சாலை வரி வசூலிக்கின்றனர்,
எனவே, நாங்களும் வசூலிக்கிறோம் என்கின்றனர். தற்போது, 600க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், தினமும் 2 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
அடுத்த சில வாரங்களில் சபரிமலை சீசனும் துவங்க உள்ளதால், தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும். எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களை பலிகடா ஆக்குவதா? தேசிய அளவிலான அனுமதி சீட்டு பெற்றுள்ள வாகனங்கள், குறித்த காலம் வரை, எந்த மாநிலங்களுக்கும் செல்லலாம். இந்நிலையில், பேராசை காரணமாக, பிற மாநிலங்களின் வாகனங்களுக்கு, தி.மு.க., அரசு கூடுதல் சாலை வரி விதிக்க துவங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட, கேரளா, கர்நாடகா மாநில ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், அந்தந்த மாநில அரசுகளை வலியுறுத்தி, தற்போது, பிற மாநிலங்களில் தமிழக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிற மாநில முதல்வர்கள் எல்லாம், அந்தந்த மாநில மக்கள் நலனுக்காக செயல்படும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும், தனது கூட்டணி கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களை பலிகடா ஆக்கி கொண்டிருக்கிறார். --அண்ணாமலை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் வரி விலக்கு வேண்டும் தமிழக அரசு, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும், பிற மாநில பதிவெண் கொண்ட பஸ்களுக்கு, வரி விதித்து வந்ததை காரணம் காட்டி, இப்போது கேரள மற்றும் கர்நாடக அரசுகள், தமிழக பதிவெண் கொண்ட பஸ்களிடம், வரி வசூலிக்க துவங்கி உள்ளன. இந்த புதிய வரி கொள்கை, தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மிகுந்த சுமையாக மாறியுள்ளது. எனவே, தமிழக அரசு, கேரள மற்றும் கர்நாடக அரசுடன் பேசி, சாலை வரியில் விலக்கு பெற்று, அண்டை மாநிலங்களுக்கு தொடர்ந்து ஆம்னி பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வாசன் த.மா.கா., தலைவர்

