தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி: திருமாவின் இன்றைய குறி விஜய்!
தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி: திருமாவின் இன்றைய குறி விஜய்!
ADDED : அக் 01, 2025 10:08 AM

சென்னை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன் இன்று (அக் 01), ''கரூர் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி போல் பாஜ மற்றும் விஜய் ஒரே மாதிரி பேசுகிறார்கள். விஜய் திமுக அரசின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறார்'' என தெரிவித்து உள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: கடந்த செப் 27ம் தேதி கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்கு பின்னர், இரண்டு நாட்கள் கழித்து மவுனம் கலைத்து இருக்கிறார் தமிழக வெ ற்றிக்கழகத்தின் தலைவர் விஜய். அவர் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வார், அந்த இடத்திற்கு உடனடியாக வர முடியாமல் போனதற்கு வருத்தத்தை வெளிப்படுத்துவார்.
இது போன்ற அவலங்கள் இனி நடக்காமல் பார்த்து கொள்வோம் என்ற பொறுப்புணர்வை வெளிப்படுத்துவார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் யாரோ சிலரின் வழி காட்டுதலின் படி, மீண்டும் மீண்டும் திமுக வெறுப்பையே உமிழ்ந்து கொண்டு இருக்கிறார்.
திமுக அரசின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறார். கரூரில் நடந்தது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துயரம். 41 பேர் உயிரிழந்த அவலம். வெளியில் இருந்து யாரும் கல் எறிந்து வன்முறையை தூண்டவில்லை. போலீசார் தடியடி நடத்தி, துப்பாக்கிச்சூடு நடத்தி அதன் மூலம் இந்த 41 பேர் உயிரிழக்கவில்லை.
வன்முறை அல்ல
இது வன்முறை அல்ல. கூட்ட நெரிசல். அங்கே மணி கணக்கில், ஏறத்தாழ எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் காத்திருந்தவர்கள், நேரம் ஆக ஆக, கூட்டம் அதிகரிக்கும் நிலையில், ஏற்பட்ட நெரிசல், ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொண்டால் போதும் என்ற எண்ணத்திற்கு, தள்ளப்பட்ட நிலையில், கீழே விழுந்தவர்களை மிதித்து கொண்டு தப்பித்து ஓடி இருக்கிறார்கள். அப்படிபட்ட ஒரு துயரம் தான் அங்கே அரங்கேறியது. அதனால் தான் 41 பேர் உயிரிழந்தார்கள்.
பாஜ போல் பேசும் விஜய்
ஆனால் இது ஒரு திட்டமிட்ட சதி போல் பாஜ மற்றும் விஜய் ஒரே மாதிரி பேசுகிறார்கள். ஆகவே இருவரும் ஒரே நேர்க்கோட்டில் தான் பயணிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இப்போது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாஜவுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. தமிழக அரசியலில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும்.
தற்போதைக்கு 2வது இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் அவர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஹேமமாலினி தலைமையில் ஒரு குழுவினை இங்கே அனுப்பி இருக்கிறார்கள். அந்த குழுவில் இடம் பெற்ற அத்தனை பேரும், ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்கள்.
திடீரென கரிசனம்
ஹேமமாலினிக்கு தமிழர்கள் மீது திடீரென கரிசனம் வந்துவிட்டது. கரூரில் நடந்த அவலம் குறித்து அவர் ஆய்வு நடத்த வந்து இருக்கிறார். இது விபத்தாக தோன்றவில்லை, இதில் ஏதோ சதி இருக்கிறது என்று அதற்கு ஒரு புதிய கோணத்தை, ஒரு புதிய தோற்றத்தை, மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
விஜயை காப்பாற்ற வேண்டும். அவர் மீது ஒரு இரக்கம் உருவாக வேண்டும். எப்படியாவது திமுக அரசின் மீது மக்களின் கோபத்தை திருப்ப வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.