UPDATED : டிச 21, 2025 08:29 AM
ADDED : டிச 21, 2025 01:49 AM

பிரதமர் மோடி அமைச்சரவையில் சாலை போக்குவரத்து அமைச்சராக இருப்பவர், நிதின் கட்கரி. பா.ஜ., தேசிய தலைவராக பதவி வகித்தவர். நாட்டின் மூலை முடுக்குகளிலும் சாலை அமைக்கும் பணிகளை சிறப்பாக செய்து வருபவர். 'இவருக்கு பிரதமராகும் தகுதியும் உண்டு' என, பா.ஜ., வட்டாரங்களிலேயே ஒரு பேச்சு உண்டு. இதனால், 'இவருக்கும், மோடிக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி உண்டு' என்ற கருத்தும் பா.ஜ.,வில் உள்ளது.
கட்சி பாகுபாடு இல்லாமல், எந்த எம்.பி., உதவி கேட்டாலும், உடனே அவர்களை தன் அலுவலகத்திற்கு அழைத்து, நிதின் கட்கரி உதவி செய்வார். இதனால் எதிர்க்கட்சியினரால் மதிக்கப் படுவதோடு, பாராட்டப்படுபவரும் கூட.
சமீபத்தில், அமைச்சர் நிதின் கட்கரியை, பார்லி.,யில் உள்ள அவரது அறையில் சந்தித்த காங்., - எம்.பி., பிரியங்கா, 'என் வயநாடு தொகுதியில் சில வேலைகள் உள்ளன; அதை நீங்கள் செய்து தர வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.
உடனே, 'என் அலுவலகத்திற்கு வாருங்கள்' என அழைத்தார் நிதின் கட்கரி. ஆனாலும், லோக்சபாவில் அதே கோரிக்கையை எழுப்பினார் பிரியங்கா. உடனே, அமைச்சர் கட்கரி, 'என் அலுவலகத்திற்கு வாருங்கள்; செய்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்து விட்டேனே...' என்றார்.
மதியம், கட்கரியின் அலுவலகத்திற்கு பிரியங்கா சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. மராட்டிய உணவு வகைகளுடன், இட்லி, தோசை என தமிழக உணவுகளும் தயாராக இருந்தன. பிரியங்காவுக்கு மதிய உணவு விருந்தளித்தார் கட்கரி. அத்துடன், வயநாடு தொகுதியில் செய்ய வேண்டிய வேலைகளுக்கும், உடனடியாக தன் அதிகாரிகளை அழைத்தும் உத்தரவிட்டார். இதனால், பிரியங்கா 'குஷி' ஆனார்.
இவர் மட்டுமல்லாமல், மற்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் கட்கரியை புகழ்ந்து தள்ளுகின்றனர். 'எங்கள் தொகுதி சாலை சம்பந்தப்பட்ட எந்த பிரச்னைகள் என்றாலும், உடனடியாக தீர்த்து வைக்கிறார்; மிக நல்ல மனிதர்' என, பாராட்டுகின்றனர்.

