5 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலர்ட்' : வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு
5 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலர்ட்' : வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு
UPDATED : அக் 17, 2025 09:49 AM
ADDED : அக் 17, 2025 03:31 AM

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. வரும், 24ல், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
நாட்டிலேயே அதிகளவு மழை பொழிவை வழங்கும் தென்மேற்கு பருவமழை நேற்று விலகியது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளா மாேஹ, தெற்கு கர்நாடகா, ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை, 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மற்றும் திருச்செந்துாரில் தலா, 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, துாத்துக்குடி ரயில் நிலையத்தில், தலா 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென்மண்டல தலைவர் அமுதா அளித்த பேட்டி:
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. அக்டோபர், 1 முதல் அக்., 16 வரை, தமிழகத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது.
இந்த காலக்கட்டத்தின் இயல்பான மழை அளவு, 7 செ.மீ., தற்போது, இயல்பை விட, 37 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்'டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில், வரும், 19, 20ம் தேதிகளிலும், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 19ம் தேதியும் கனமழை பெய்யும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், வரும் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவ மழையின் இயல்பான அளவு 44 செ.மீ., தான். நடப்பாண்டு, 50 செ.மீ., மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில், புயல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
வரும், 24ம் தேதி உருவாகும் தாழ்வு பகுதி வலுவடையும். அது, புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.