கடந்த தேர்தலை விட 5 மடங்கு அதிகம்; பீஹாரில் 100 இடங்களில் களம் இறங்க ஒவைசி கட்சி திட்டம்!
கடந்த தேர்தலை விட 5 மடங்கு அதிகம்; பீஹாரில் 100 இடங்களில் களம் இறங்க ஒவைசி கட்சி திட்டம்!
ADDED : அக் 11, 2025 06:35 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஒவைசி கட்சி முடிவு செய்துள்ளது. இது கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீஹார் சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறும். இதனால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
பீஹார் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி முடிவு செய்துள்ளது. இது கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம். இது தொடர்பாக, ஒவைசி கட்சியின் பீஹார் மாநில தலைவர் அக்தருல் இமான் கூறியதாவது:
100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன. 2020ம் ஆண்டு தேர்தலின்போது, நாங்கள் ஓட்டுகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம்சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.
தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 3ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும். பீஹாரில் மூன்றாவது மாற்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
பல ஆண்டுகளாக, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியை மையமாகக் கொண்டு அரசியல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதில், 5 இடங்களில் ஒவைசி கட்சி வென்றது. அவர்களில் 4 பேர் லாலு கட்சியில் பின்னாளில் இணைந்து விட்டனர்.