முகவரி இல்லை என 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் நீக்கம் பெரிய மோசடி; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
முகவரி இல்லை என 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் நீக்கம் பெரிய மோசடி; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
UPDATED : டிச 26, 2025 05:57 PM
ADDED : டிச 26, 2025 05:41 PM

புதுக்கோட்டை: 'எஸ்ஐஆர் பணியின் போது முகவரி இல்லை என 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் நீக்கம் செய்யப்பட்டது பெரிய மோசடி' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிருபர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது: எஸ்ஐஆர் ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஒரு ஊரில் 13 பேர் உயிருடன் இருக்கிறார்கள், அவர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். இறந்தவர்களை விட்டு விடலாம். இரட்டை பதிவை விட்டு விடலாம். முகவரியே இல்லாமல் இருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் முகவரி இல்லாதவர்களை எத்தனை பேரை தெரியும். 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்களா?
எனக்கு முகவரி இல்லாதவர்களை யாரையும் தெரியாது. தூய்மை பணியாளர்கள் கூட ஏதோ ஒரு முகவரியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒன்பது பேரில் ஒருவருக்கு முகவரியே கிடையாதா? இதைவிட ஒரு வேடிக்கையை நான் பார்த்ததே கிடையாது. இது மிகப்பெரிய மோசடி அதுவும் தமிழகத்தில் இது பின்தங்கிய மாநிலம் இல்லை.
காட்டுப் பகுதி மாநிலம் அல்ல. வனப் பகுதி மாநிலம் அல்ல மலைப்பகுதி மாநிலம் அல்ல. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்ற மாநிலம். எட்டு கோடி பேரில் 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் யாராவது நம்புவார்களா?. இறந்தவர்களை ஏற்றுக்கொள்கிறோம். இரட்டை பதிவை ஏற்றுக் கொள்ளலாம் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி நம்புவது?
எஸ்ஐஆர் பணி செய்தது தமிழகஅரசு ஊழியர்கள் என்றாலும் அந்த பணி செய்யும் போது தேர்தல் கமிஷனின் ஊழியர்களாக இருப்பார்கள். எஸ்ஐஆர் பணி செய்பவர் தமிழக அரசு ஊழியர்களாக இருந்து செய்ய மாட்டார்கள். அந்த நாளுக்கு அந்த நேரத்திற்கு அவர் தேர்தல் கமிஷனின் ஊழியர். தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவரை பதவியை விட்டு கூட நீக்கலாம். அதனால் அவர்களை தமிழக அரசு ஊழியர்கள் என்று நினைக்க வேண்டாம். மாவட்ட கலெக்டர் தற்போது இருக்கிறார் தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் போது அவரும் தமிழக அரசு பணியாளர் கிடையாது.
திமுக அரசு கூட்டணியில் இருக்கிறோம் அவர்களுடன் தேர்தல் உடன்பாடு தொகுதி பங்கீடு காக ஐந்து பேர் குழு காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. ஐந்து பேர் குழு திமுக தலைவரை சந்தித்திருக்கிறார்கள். அவர் நான் ஒரு கமிட்டி அமைப்பேன் அப்போது இரண்டு குழுக்களும் பேசிக்கலாம் என்று கூறியுள்ளார். இரண்டு குழுக்களும் பேசி அவர்கள் தலைவர்களுக்கு அனுப்பிய பிறகு தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

