'ஆப்பரேஷன் சிந்துார் 2.0' அச்சத்தில் பாகிஸ்தான்: எல்லையில் தடுப்பு பணிகள் மும்முரம்
'ஆப்பரேஷன் சிந்துார் 2.0' அச்சத்தில் பாகிஸ்தான்: எல்லையில் தடுப்பு பணிகள் மும்முரம்
ADDED : டிச 27, 2025 01:35 AM

இஸ்லாமாபாத்: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை போல, மற்றொரு ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தால் என்ன செய்வது என்ற அச்சத்தில், எல்லையின் பல பகுதிகளில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்களை அழிக்கும் அமைப்புகளை பாக்., நிறுவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, மே 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை நம் படைகள் தகர்த்தன. நம் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாக்., கெ ஞ்சியதை அடுத்து, சண்டை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், நம் ராணுவ உளவுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: ஆப்பரேஷன் சிந்துாரின் போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வி அடைந்தது. இந்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டின் பல்வேறு இடங்களில் துல்லிய தாக்குதல் நடத்தின.
ஆப்பரேஷன் சிந்துாரை போல மற்றொரு ராணுவ நடவடிக்கையை நாம் நடத்துவோம் என்ற அச்சத்தில், பாக்., கதிகலங்கி போயுள்ளது. எனவே, எல்லையின் பல்வேறு இடங்களில், 35க்கும் மேற்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அந்நாடு நிறுவியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச், நவ்ஷோரா உள்ளிட்ட இடங்களில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைகளில் இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
'ஸ்பைடர் கவுன்டர்' எனப்படும், 10 கி.மீ., தொலைவுக்குள் வரும் சிறிய ட்ரோன்களை கண்டறியும் சாதனம், ட்ரோன்களின் வீடியோ, ஜி.பி.எஸ்., கருவிகளை செயலிழக்கச் செய்யும் சப்ரா ஜாமிங் துப்பாக்கி, ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள் போன்றவை, அந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

