அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்த காத்திருக்கும் மக்கள்: இபிஎஸ்.,
அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்த காத்திருக்கும் மக்கள்: இபிஎஸ்.,
ADDED : அக் 17, 2025 01:32 AM

சென்னை: அதிமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் காத்திருப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்., தெரிவித்தார்.
தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற, கடந்த 1972ம் ஆண்டு, அக்., 17ம் தேதி, அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். கடந்த 1977 சட்டசபை தேர்தலில், அ,தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. எம்.ஜி.ஆர்., முதல்வரானார். தி.மு.க., முகவரி இழந்து அடையாளம் தெரியாமல் போனது. ஜெயலலிதா, தமிழகத்தை, பீடுநடைபோடச் செய்தார்.
அவர் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.,வுக்கு எத்தனையோ சோதனைகள், வேதனைகள், சதிகள், சூழ்ச்சிகள், துரோகங்கள் வந்தன. அவற்றை கடந்து, கட்சியை மீட்டு, இன்று வீறுநடை போட செய்திருக்கிறோம். கடந்த, நான்கரை ஆண்டுகளாக, தி.மு.க., அரசின் 'பெயிலியர்' ஆட்சியில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, சொத்து வரி, மின் கட்டணம், பால், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களை, புதை குழியில், தள்ளிவிட்டு, தங்கள் குடும்பம் செழிக்க, பிரயத்தனம் செய்கிறது. தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை விரட்டவும், அ.தி.மு.க.,வை ஆட்சி பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும், அ.தி.மு.க.,வின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்தவிட முடியாது.
அ.தி.மு.க., 54வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், இந்த தருணத்தில், தொண்டர்களுக்கு வாழ்த்துகள். தமிழக மக்களை, இன்னல்களுக்கு ஆளாக்கிய, தி.மு.க.,வின் 'பெயிலியர்' ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம். அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.