பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: போக்சோ சட்டத்தில் போலீஸ்காரர் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: போக்சோ சட்டத்தில் போலீஸ்காரர் கைது
UPDATED : நவ 09, 2025 07:01 AM
ADDED : நவ 09, 2025 07:00 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (நவ 08) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ்காரர் கைது
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி 10ம் வகுப்பு படிக்கிறார். இவர், கிளியனுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி காதலனுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். பெற்றோர் புகாரில் ஆரோவில் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், 6ம் தேதி அதிகாலை, 4:30 மணியளவில், திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மாணவி தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தென்ஆலப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோ, 40, மாணவியை நிறுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் இளங்கோ அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஆரோவில் போலீசார், நேற்று முன்தினம், மாணவியை சென்னையில் மீட்டனர்.விசாரணையில், இளங்கோ தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி கூறினார்.
திண்டிவனம் போலீசார், இளங்கோவை போக்சோவில் கைது செய்தனர்.
வாலிபருக்கு 'போக்சோ'
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மரப்பாகரத்தை சேர்ந்தவர் கண்ணாயிரமூர்த்தி, 25. இவர், பருத்திச்சேரியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதை, சிறுமியின் தாய் கண்டித்துள்ளார். அவரை வாலிபர் மிரட்டியுள்ளார்.
நவ., 5ல், கல்லுாரிக்கு சென்ற சிறுமியிடம், திருமண ஆசை வார்த்தை கூறி, தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு, சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின், 7ம் தேதி காலை சிறுமியை, அவரது வீட்டின் அருகில் விட்டு சென்றுள்ளார். திருத்துறைப்பூண்டி மகளிர் போலீசார், கண்ணாயிரமூர்த்தி மீது நேற்று போக்சோவில் வழக்கு பதிந்தனர்.
ஆசிரியருக்கு காப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 29; தனியார் பள்ளி வரலாறு ஆசிரியர். மூன்று மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
சுவாமிமலையில், அக்., 29ம் தேதி கடைக்கு பால் வாங்க சென்ற 15 வயது சிறுவனை, பாலசுப்பிரமணியின் பைக்கில் ஏற்றி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அங்கிருந்து தப்பிய சிறுவன், பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். நேற்றுமுன்தினம் சுவாமிமலை போலீசில், பெற்றோர் அளித்த புகாரில், பாலசுப்பிரமணியனை போக்சோவில் கைது செய்தனர்.

