ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 100 வது பிறந்தநாள்: ஊட்டியில் 'பிரேம் பிரவாஹினி' ரத ஊர்வலம் கோலாகலம்
ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 100 வது பிறந்தநாள்: ஊட்டியில் 'பிரேம் பிரவாஹினி' ரத ஊர்வலம் கோலாகலம்
UPDATED : செப் 25, 2025 08:09 AM
ADDED : செப் 24, 2025 11:50 PM

ஊட்டி: ஊட்டியில் சத்யசாய்பாபாவின், 100 வது பிறந்தநாளை ஒட்டி,'பிரேம் பிரவாஹினி,' ரத ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது.
சத்யசாய் பாபாவின், 100 வது பிறந்த நாளை ஒட்டி, உலகம் முழுவதும் அன்பு மற்றும் சேவையை பரப்பும் நோக்கில் பல்வேறு ரத யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 'சத்ய சாய் பிரேம் பிரவாஹினி,' எனப்படும் இந்த ரத ஊர்வலம், ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்திலிருந்து ஏப்., மாதம் துவங்கியது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்கள், நகரங்களை கடந்து செல்லும் போது, மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்திற்கு வந்த 'சத்ய சாய் பிரேம் பிரவாஹினி,' ரதம், 150 கிராமங்களுக்கு சென்று சத்யசாய் பாபாவின் உலகளாவிய அன்பு, சேவை மற்றும் ஆன்மிக செய்திகளை மக்களிடம் எடுத்து சென்றது.
அதில், பங்கேற்ற நிர்வாகிகள், பக்தர்களுக்கு ஆன்மிக அனுபவத்தை அளித்து அவர்களை பக்தி இயக்கத்துடன் இணைப்பது குறித்து தெரிவித்தனர். அப்போது ஒவ்வொரு கிராமத்திலும் பொது சேவையில் ஈடுபட்டு வரும், 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இதன், நிறைவு விழா நிகழ்ச்சியை ஒட்டி, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து இளம் படுகர் நல சங்கம் வரை, பிரேம் பிரவாஹினி ரதத்துடன் சாய் பக்தர்கள் பஜனை நிகழ்ச்சி நடத்தி வந்தனர். தொடர்ந்து , மாலை வரை பஜனை நிகழ்ச்சி, தர்ம காரியங்கள் தியான நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தது. இதில், மாநில தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் விஜய கிருஷ்ணன், மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் உட்பட திரளான சாய் பக்தர்கள் பங்கேற்றனர்.'பிரேம் பிரவாஹினி' ரதம் நேற்று மாலை ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் சென்றது.