பாலியல் புகாரால் பாதிரியார் நீக்கம்; சர்ச்சுக்குள் இரு தரப்பினர் மோதல்
பாலியல் புகாரால் பாதிரியார் நீக்கம்; சர்ச்சுக்குள் இரு தரப்பினர் மோதல்
ADDED : டிச 08, 2025 05:45 AM

துாத்துக்குடி: பாலியல் புகாரால் பாதிரியார் நீக்கப்பட்ட நிலையில், சர்ச்சில் நடந்த பிரார்த்தனையின் போது, இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி, இஞ்ஞாசியார்புரத்தில் உள்ள புனித இஞ்ஞாசியார் சர்ச்சில், ஜேசு நசரேன், 43, பாதிரியாராக இருந்தார். சர்ச்சுக்கு வந்த பெண்கள் சிலரிடம், அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இரவில் பெண்களின் மொபைல் போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில், துாத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணியிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய அவர், நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால், பெண்கள் தரப்பில் காவல் துறையில் ஆன்லைனிலும், வடபாகம் காவல் நிலையத்திலும் தனித் தனியே புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க, இஞ்ஞாசியார்புரம் பகுதி மக்கள் நேற்று முன்தினம் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர். இதற்கிடையே, பாதிரியார் ஜேசு நசரேசனை மறை மாவட்ட நிர்வாகம் பொறுப்பில் இருந்து நீக்கியது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடக்க வேண்டிய பிரார்த்தனை, பாதிரியார் இல்லாததால் நடக்கவில்லை. அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, தற்காலிகமாக ஒரு பாதிரியாரை நியமித்து, பிரார்த்தனை நடத்த மறைமாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அவர் சர்ச்சுக்கு சென்றபோது, முன்னாள் பாதிரியார் ஜேசு நசரேனின் ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர், அவர் பிரார்த்தனையை நடத்த வேண்டும் என, வலியுறுத்தினார். இதனால், இரு தரப்பினரிடையே சர்ச்சுக்குள் மோதல் ஏற்பட்டது.
வடபாகம் போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். காயமடைந்ததாக இருதரப்பை சேர்ந்தவர்களும் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

