பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் காலியாக செல்லும் தனியார் மினி பஸ்கள்
பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் காலியாக செல்லும் தனியார் மினி பஸ்கள்
ADDED : டிச 10, 2025 05:51 AM

சென்னை: அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அறிவிக்கப்பட்டதால், தனியார் மினி பஸ்களில் கூட்டம் இல்லை. இதனால், நஷ்டத்தில் இயக்குவதாக, உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது, மொத்தம் 3,000 மினி பஸ்களை இயக்கி வருகிறோம். நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும், பஸ், ரயில் நிலையங்களில் இருந்து கல்லுாரி, மருத்துவமனைகளை இணைக்கும் பகுதிகளுக்கும் அதிகளவில் மினி பஸ்கள் இயக்கி வருகிறோம்.
எங்களது பஸ்களில் பெண்கள் தான் அதிகளவில் செல்வர். ஆனால், அரசு டவுன் பஸ்களில், பெண்களுக்கான இலவச பயண திட்டம் இருப்பதால், காத்திருந்து அவற்றில் பயணம் செய்கின்றனர். டீசல், உதிரிபொருட்கள் விலை உயர்வு, ஊழியர்களுக்கான செலவு என, எங்களுக்கு அன்றாட செலவுக்கு கூட, கலெக் ஷன் கிடைப்பதில்லை.
இதனால், மினி பஸ் தொழில் நலிவடையும் நிலையில் இருக்கிறது. எனவே, பெண்கள் இலவச பயண திட்டத்தை, தனியார் மினி பஸ்களிலும் செயல்படுத்தினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான கட்டணத்தை, அரசு எங்களுக்கு தர வேண்டும். இதனால், கிராமப்புறங்களில் பயணியருக்கு கூடுதல் பஸ் வசதியும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை, மினி பஸ்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என, அவற்றின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

