நேபாளத்தில் மாயமானவர்களின் உறவினர்கள் சந்திக்கும் சிக்கல்கள்
நேபாளத்தில் மாயமானவர்களின் உறவினர்கள் சந்திக்கும் சிக்கல்கள்
ADDED : செப் 18, 2026 01:08 AM

சென்னை: நேபாளத்தில் காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள், காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமலும், வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
நேபாளத்தில், கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில், தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற 305 பேர் சிக்கினர். அவர்களில், 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், 85 பேரை காணவில்லை. அவர்கள் குறித்து தகவல்கள் கிடைக்காததால், உறவினர்கள் தவித்து வருகின்றனர். நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது. அதற்காக, மூன்று அதிகாரிகள் காட்மாண்டுவில் முகாமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். காணாமல் போனவர்களின் மொபைல் போன் எண்கள், பல்வேறு அரசு சேவைகளில் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
உதாரணமாக காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இதுபோல் வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட, அரசு சேவைகளிலும், அவர்களின் மொபைல் போன் எண்கள் தான் இணைக்கப்பட்டு உள்ளன.
இதனால், காணாமல் போனவர்களின் உறவினர்கள், வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமலும், காஸ் சிலிண்டர் பதிவு செய்ய முடியாமலும், அவர்கள் பெற்று வந்த ஓய்வூதியங்களை எடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
எனவே, அரசு கவனத்தில் எடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
