அவசர நிலை பிரகடனம் ஒரு தவறான முடிவு: சோனியா கருத்து
அவசர நிலை பிரகடனம் ஒரு தவறான முடிவு: சோனியா கருத்து
UPDATED : நவ 10, 2026 10:54 PM
ADDED : நவ 10, 2026 09:03 PM

புதுடில்லி:
காங்கிரசின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா, 'பிலாங்கிங் எ ஜர்னி ஆப் லவ்' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். மொத்தம் 544 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை, 'ஹார்பர்காலின்ஸ்' நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில், சோனியாவின் குழந்தை பருவம், இளமை பருவ காதல், படிப்பு, கணவர் ராஜிவ் படுகொலை, அரசியல் வருகை என தன் வாழ்க்கை அனுபவங்களை அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த சுயசரிதை புத்தகம் குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்தும், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில பத்திரிகைக்கு சோனியா பேட்டி அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாட்டில், கடந்த 1975ல் அவசர நிலையை காங்கிரசை சேர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா அமல்படுத்தினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவது தடை செய்யப்பட்டது. 1977ல் இந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது.
இந்த அவசர நிலை பிரகடனம் என்பது தவறான முடிவு; அமல்படுத்திய இந்திராவும் இதை பிற்காலத்தில் உணர்ந்திருப்பார் என நம்புகிறேன். அவர் மனதளவில் ஒரு ஜனநாயகவாதி என நான் கருதுகிறேன். இதைக் கேட்டு பலர் சிரிக்கலாம். ஆனால், அவசர நிலை அமலில் இருந்த காலத்தில் ஒருபோதும் அவர் நிம்மதியாக இருக்கவில்லை. அது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருந்தது என நினைக்கிறேன்.
அவசர நிலை அமல்படுத்திய விவகாரத்தில், இந்திராவின் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. என் கணவர் ராஜிவ் இதை எதிர்த்தார்; அடுத்த தேர்தல் வரும் வரை காத்திருக்குமாறு தன் தாயாரிடம் கூறினார். ஆனால், இந்திராவின் இளைய மகன் சஞ்சய், அவசர நிலையை அமல்படுத்தியே தீர வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தினார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் இந்திராவை வீழ்திதிவிடுவர் என்றும் அவர் எச்சரித்தார்.
அவசர நிலை விவகாரத்தில் சஞ்சயை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அதன் விளைவாக ஏற்பட்ட பல பாதிப்புகளை தடுத்திருக்க முடியும். அவசரநிலை பிரகடனம் என்றாலே பொதுமக்களின் பார்வையில் சஞ்சயின் பெயர் நினைவுக்கு வரலாம். ஆனால், அவர் மட்டும் இதற்கு காரணமல்ல. இந்திராவை சுற்றி இருந்த சில மூத்த தலைவர்கள் சிலரிடம் இருந்தும் இந்த விவகாரத்தில் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டது.
அவரின் பார்வையில் இருந்து பார்த்தால், அன்றைய சூழலில் அவசர நிலை பிரகடனம் அவசியம் என்றே கருதப்படுகிறது. அந்த சூழலை சமாளிக்க இந்திரா கடுமையாக போராடியதையும் காண முடிந்தது. ஒரு கட்டத்தில் அவசர நிலை அமல்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதத்தை இந்திரா புரிந்து கொண்டார். அதை சரிசெய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ச்சி அளிக்கிறது
அரசியலமைப்பை கொன்று, அடிப்படை உரிமைகளை முடக்கிய அவசர நிலையை சோனியா நியாயப்படுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. நேரு, காந்தி குடும்பத்தினர் செய்த வரலாற்று தவறுகளை இனிப்பான வார்த்தைகளால் மூடி மறைப்பதும், காங்கிரஸ் இழைத்த பெரும் குற்றங்களை மறைப்பதுமே இந்த நூலின் நோக்கமாக தெரிகிறது. சோனியா தன் புத்தகத்துக்கு 'பிலாங்கிங்' என்பதற்கு பதிலாக 'ஒயிட்வாஷிங்' என, பெயரிட்டிருக்கலாம்.
- சி.ஆர்.கேசவன்
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
