ADDED : நவ 10, 2026 10:18 PM
புதுச்சேரி: கிருமாம்பாக்கத்தில் வீடு சூறையாடப்பட்ட வழக்கில் மூன்று பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லுாரிக்கு எதிரே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆறு பேருக்கு சொந்தமான ஐந்து கானி நிலம் உள்ளது. இதில், அவர்களின் உறவினரான வேல்முருகன் என்பவர் வீடு கட்டி வசித்து வந்தார். இதற்கிடையில் நிலம் சம்பந்தமாக பிரான்சில் உள்ளவர்களுக்கும் வேல்முருகனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நள்ளிரவில், வேல்முருகன் வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து சூறையாடினர். இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் இருபதிற்கும் மேற்பட்ட ரவுடிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மொட்டைத்தோப்பு மணிகண்டன், கிருமாம்பாக்கம் குமார் (எ) கோஷாகுமார் ஆகியோரை கடந்த 6ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று முத்தியால்பேட்டையை சேர்ந்த பகவதி சங்கர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
