UPDATED : நவ 10, 2026 09:06 PM
ADDED : நவ 10, 2026 09:03 PM

புதுச்சேரி: சாரம் ரேஷன் கடையில் அரசின் தீபாவளி தொகுப்புகளை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் சிவப்பு மற்றும் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில், ரூ.700 மதிப்பிலான 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவை, 500 கிராம் மைதா அடங்கிய தீபாவளி தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவக்கி வைத்தார்.
ஆனால், நகரம் மற்றும் கிராமபுறங்களில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு தீபாவளி தொகுப்பு காலதாமதமாக வந்தது. இதனால், பண்டிகையின் போது பயனாளிகளுக்கு தொகுப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை முடிந்து, நேற்று மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டதால் தீபாவளி தொகுப்பு கிடைக்க பெறாத பயனாளிகள் தங்களது ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொருட்களை வாங்கி சென்றனர்.
