11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுக்கு 1,580 மெகா வாட் கொள்முதல்
11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுக்கு 1,580 மெகா வாட் கொள்முதல்
ADDED : நவ 07, 2025 04:22 AM

சென்னை: தமிழக மின் வாரியம், ஐந்து ஆண்டுகளுக்கு, தினமும், 24 மணி நேரத்துக்கு, 1,580 மெகா வாட் மின்சாரம் வாங்க, 11 நிறுவனங்களுடன் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும், மின்சாரம் போதவில்லை. பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியார் நி றுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு தினமும், 24 மணி நேரத்துக்கு, 1,500 மெகா வாட் மின்சாரம் என, ஐந்து ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய, மின் வாரியம் சமீபத்தில் 'டெண்டர்' கோரியது. இதில், 11 நிறுவனங்களிடம் இருந்து, 1,580 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. ஆணையம் அனுமதி கிடைத்ததும் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்படும்.
ஒரு யூனிட் மின்சார விலை, 5.38 ரூபாய் முதல், 6.15 ரூபாய் வரை உள்ளது. ஒரு மெகா வாட்டில் இருந்து தினமும், 24,000 யூனிட் கிடைக்கும். இதனால் ஒரு நாளைக்கு, 1,580 மெகா வாட்டில் இருந்து, 3.79 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஒரு யூனிட்டிற்கு, 5.38 ரூபாய் என்பதால், தினமும், 20 கோடி ரூபாய் செலவாகும். எனவே, மாதம், 600 கோடி ரூபாய் என, ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், 36,000 கோடி ரூபாய் செலவாக உள்ளது.

