நிலம் அணுகு சாலை சான்றுக்கு ரூ.60,000 லஞ்சம் பெற்ற பி.டி.ஓ., பஞ்., செயலர் கைது
நிலம் அணுகு சாலை சான்றுக்கு ரூ.60,000 லஞ்சம் பெற்ற பி.டி.ஓ., பஞ்., செயலர் கைது
ADDED : டிச 24, 2025 09:59 PM

சூளகிரி : சூளகிரி அருகே, அணுகு சாலைக்கு சான்று வழங்க, 60,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பி.டி.ஓ., மற்றும் பஞ்., செயலர் ஆகிய இருவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய டெம்பிள் லேண்ட் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 56. இவர், தன் மனைவி லட்சுமி பெயரில், சூளகிரி அருகே மருதண்டப்பள்ளி பஞ்.,ல், 53 சென்ட் காலி இடம் வாங்கினார். அதற்கு செல்ல அணுகு சாலை சான்று கேட்டு, சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில், கடந்த, 3 மாதங்களுக்கு முன் மனு அளித்தார்.
அணுகுசாலை சான்று வழங்க, சூளகிரி பி.டி.ஓ., (கிராம வளர்ச்சி) கார்த்திக்குமார், 43, மருதண்டப்பள்ளி பஞ்., செயலர் ராஜேந்திரன், 37, ஆகியோர், 60,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார், ரசாயனம் தடவிய, 60,000 ரூபாயை வெங்கடேசனிடம் கொடுத்து அனுப்பினர். அதை மதியம், சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்த பி.டி.ஓ., கார்த்திக்குமார், பஞ்., செயலர் ராஜேந்திரன் ஆகியோரிடம், வெங்கடேசன் கொடுத்தார்.
அதை பெற்று கொண்ட ராஜேந்திரன், தன் பாக்கெட்டில் வைத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், பஞ்., செயலர் ராஜேந்திரன் மற்றும் பி.டி.ஓ., கார்த்திக்குமார், ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

