தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு : பஞ்சாபில் போலீசார் வழக்குப்பதிவு
தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு : பஞ்சாபில் போலீசார் வழக்குப்பதிவு
ADDED : அக் 08, 2025 10:17 PM

சண்டிகர்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியாகவும், அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தோர் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் கஜூராஹோவில் 7 அடி உயர முள்ள விஷ்ணு சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தினர்.இது தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மறுத்துவிட்டார். அத்துடன், ''எதையாவது செய்யும்படி அந்த கடவுளிடமே சென்று கேளுங்கள்,'' என கருத்து கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்து, ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.இதைத் தொடர்ந்து, தன் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், தான் அனைத்து மதங்களையும் மதிப்பவன் என்றும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், வழக்கு விசாரணைக்காக பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு கூடியபோது, 71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், திடீரென காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார்.அதற்குள் உஷாரடைந்த நீதிமன்ற காவலர்கள், உடனடியாக பாய்ந்து சென்று வழக்கறிஞரை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர் வீச முயன்ற காலணி தலைமை நீதிபதி மீது படாமல் கீழே விழுந்தது.உச்ச நீதிமன்ற அறையில் நிகழ்ந்த இந்த இடையூறுகளை பொருட்படுத்தாத தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 'இது போன்ற சம்பவங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. விசாரணையை தொடருங்கள்' என, கூறி, நீதிமன்ற பணியில் மூழ்கினார்.
காலணியை வீசிய உடனே, கிஷோரை கைது செய்த காவலர்கள், அவரை வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர்.ஆனால், தலைமை நீதிபதி, 'அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என, பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதனால், கிஷோரை காவலர்கள் விடுவித்தனர். எனினும், இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்தும் தலைமை நீதிபதியை விமர்சித்து ஆட்சேபனைக்குரிய வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினர். அந்தப் பதிவுகள் அனைத்தும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், நீதித்துறையின் உயர்ந்த அமைப்பை இழிவுபடுத்தும் வகையில் இருந்தன. ஜாதி ரீதியிலும் ஆட்சேபனைக்குரிய வகையிலும் கருத்துகளைப் பதிவிடத் துவங்கினர்.
இது தொடர்பாக வந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து பஞ்சாப் போலீசார் அத்தகைய கருத்துகளைப் பதிவு செய்தோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(1)(r), 3(1)(s) மற்றும் 3(1)(u) மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 96, 352, 353(1), 353(2), 61 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்